தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நாட்டின் முதலாவது இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் - மும்பையில் இன்று தொடங்கப்பட்டது
Posted On:
18 JUL 2025 4:28PM by PIB Chennai
நாட்டின் முதலாவது இந்தியப் படைப்பாற்றல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மும்பையில் உள்ள தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று மும்பையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இதனையடுத்து தேசிய திரைப்பட மேம்பாட்டு வளாகத்தில் உள்ள இந்திய திரைப்பட அருங்காட்சியகம் மற்றும் வேவ்ஸ் 2025 பாரத் அரங்கும் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உலக ஒலி,ஒளி மற்றும் பொழுது போக்கு உச்சிமாநாட்டின் விளைவுகள் குறித்த அறிக்கையின் முதலாவது பதிப்பும் வெளியிடப்பட்டது. பின்னர் இந்தியப்படைப்பாற்றல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இலச்சினை மற்றும் 17 வகையான பாடத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில திரைப்பட, நாடக, கலாச்சார மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக அம்மாநில அரசு மற்றும் பிரசாசர் பாரதி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. நாட்டின் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறையின் படைப்பாற்றலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து ஒருங்கிணைந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஊடக மையத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், புதுமை கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாடு மற்றும் ஊடகத் துறையின் சர்வதேச போட்டித்தன்மை ஆகியவற்றுக்கு உத்வேகம் அளிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், பிரதமரின் கனவை நனவாக்கும் வகையில், ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களைப் போன்று படைப்பாற்றல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும்(ஐஐசிடி) உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புதிய திறன்களுடன் கூடிய பொருளாதார உருவாக்கம் பயிற்சி மற்றும் உபகரணங்களில் பணியாற்றும் நபர்களுக்கு உலகின் சிறந்த நடைமுறைகளை வழங்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறினார். குறைவான கால அவகாசத்திலேயே முதலாவது படைப்பாற்றல் தொழில்நுட்பத்திற்கான கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.
இந்தப் படைப்பாற்றல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்காக 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2145785
---
(Release ID: 2145785)
AD/TS/SV/KPG/DL
(Release ID: 2145910)