பிரதமர் அலுவலகம்
குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நபர்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
Posted On:
13 JUL 2025 10:47AM by PIB Chennai
குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ள நான்கு சிறப்புமிக்க ஆளுமைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், ஒவ்வொருவரது பங்களிப்புகளையும் எடுத்துரைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சட்டத் துறையில் முன்மாதிரியாக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பணியாற்றும் திரு உஜ்வல் நிகாமைப் பிரதமர் பாராட்டியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முதன்மையான பங்கு வகித்து, சாதாரண குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்த தொடர்ந்து பாடுபட்ட ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர் திரு நிகாம் என்று பிரதமர் கூறியுள்ளார். மாநிலங்களவைக்கு அவர் நியமிக்கப்பட்டதை திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளதுடன் அவர் நாடாளுமன்றப் பணியில் சிறக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
"சட்டத்துறையிலும் நமது அரசியலமைப்பிலும் திரு உஜ்வால் நிகாமின் அர்ப்பணிப்பு முன்மாதிரியானது. அவர் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர் மட்டுமல்ல. முக்கியமான வழக்குகளில் நீதியை நிலை நிறுத்துவதில் முன்னணியில் இருந்துள்ளார். தமது சட்டப் பணியில் அவர், அரசியலமைப்பு விழுமியங்களை வலுப்படுத்தவும், பொது மக்கள் எப்போதும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்யவும் எப்போதும் பாடுபட்டு வந்துள்ளார். குடியரசுத் தலைவர் அவரை மாநிலங்களவைக்கு நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது நாடாளுமன்றப் பணிக்கு எனது வாழ்த்துகள்."
திரு சி. சதானந்தன் மாஸ்டரைப் பற்றிப் குறிப்பிட்டுள்ள, பிரதமர் அவரது வாழ்க்கை அநீதிக்கு எதிரான சின்னமாக திகழ்கிறது எனது விவரித்துள்ளார். வன்முறையையும் மிரட்டல்களையும் எதிர்கொண்ட போதிலும், திரு சதானந்தன் மாஸ்டர் தேச வளர்ச்சிக்கு உறுதியுடன் இருந்துள்ளார் என்று பிரதமர் கூறியுள்ளார். ஒரு ஆசிரியராகவும் சமூக சேவகராகவும் அவரது பங்களிப்புகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
"திரு சி. சதானந்தன் மாஸ்டரின் வாழ்க்கை, அநீதிக்கு அடிபணியாமல் இருப்பதற்கும், துணிச்சலுக்கும் எடுத்துக்காட்டாகும்.வன்முறை, மிரட்டல் ஆகியவற்றால் தேச வளர்ச்சிக்கான அவரது உத்வேகத்தைத் தடுக்க முடியவில்லை. ஒரு ஆசிரியராகவும் சமூக சேவகராகவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். மாநிலங்களவை உறுப்பினராக அவரது பணிக்கு வாழ்த்துகள்."
திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர், அவர் ஒரு ராஜதந்திரி, அறிவுஜீவி, உத்திசார் சிந்தனையாளர் என பல வகைகளில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திலும் திரு ஷ்ரிங்லாவின் பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார். மாநிலங்களவைக்கு அவர் நியமிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஒரு ராஜதந்திரி, அறிவுஜீவி, உத்திசார் சிந்தனையாளராக சிறந்து விளங்குகிறார். பல ஆண்டுகளாக, அவர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார், மேலும் நமது ஜி20 தலைமைத்துவத்திற்கும் அவர் பங்களித்தார். குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு அவர் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அவரது தனித்துவமான கண்ணோட்டங்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை பெரிதும் வளப்படுத்தும். @harshvshrinla”
டாக்டர் மீனாட்சி ஜெயின் நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர், இது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று கூறியுள்ளார். அறிஞர், ஆராய்ச்சியாளர், வரலாற்றாசிரியர் என்ற வகையில் அவரது சிறப்பான பணிகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார். கல்வி, இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல் ஆகியவற்றில் அவரது பங்களிப்புகளைப் பிரதமர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். மாநிலங்களவையில் அவரது பணிக்குப் பி்ரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
"டாக்டர் மீனாட்சி ஜெயின், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஒரு அறிஞர், ஆராய்ச்சியாளர், வரலாற்றாசிரியராக தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். கல்வி, இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய பணிகள் இத்துறைகள் சார்ந்த கல்வியை கணிசமாக வளப்படுத்தியுள்ளன. அவரது நாடாளுமன்ற பணிகளுக்கு எனது வாழ்த்துகள். @IndicMeenakshi"
****
(Release ID: 2144328)
AD/TS/PLM/SG
(Release ID: 2144349)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam