கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சார கனரக சரக்கு வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு

Posted On: 11 JUL 2025 2:57PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடியின் பசுமை வாகன இயக்கத் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நாடு முழுவதும் முதல் முறையாக மின்சார கனரக சரக்கு வாகனப் பயன்பாடு ஊக்கத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய கனரக தொழில்கள்  மற்றும் எஃகு அமைச்சர் திரு எச் டி குமாரசாமி வழிகாட்டுதலின் கீழ் கனரக தொழில்கள் துறை அமைச்சகம் மின்சார கனரக சரக்கு வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

 நாடு ழுழுவதும் சுத்தமான, நிலையான சரக்கு வாகனங்கள் இயக்கத்தை விரைவுபடுத்தும் வகையில் மின்சார கனரக சரக்கு வாகனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக ஆதரவு வழங்குவது இதுவே முதல்முறையாகும். 

இத்திட்டம் குறித்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் திரு எச் டி குமாரசாமி, நாடு முழுவதும் சரக்கு வாகன போக்குவரத்தில் 3 சதவீதம் மட்டுமே டீசல் லாரிகள் இயக்கம் இருப்பதாகவும், எனினும்  அவை பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் 42 சதவீதம் பங்களிப்பை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

 இதனால் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதற்கு தீர்வு காணும் வகையில் மின்சார கனரக சரக்கு வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் இந்த  திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாட்டை வழிநடத்தும் வகையிலும், 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடையும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி வரையறுக்கப்பட்டுள்ள என்2 மற்றும் என்3 கனரக மின்சார சரக்கு வாகனங்களுக்கு ஊக்கத் தொகை நீட்டிக்கப்படுகிறது.  என்2 பிரிவில் 3.5 டன்னுக்கு மேல் 12 டன்கள் வரை மொத்த வாகன எடை கொண்ட சரக்கு லாரிகள் இதில் அடங்கும்.

 என்.3 பிரிவில் 12 டன்களுக்கு மேல் 55 டன்கள் வரை மொத்த வாகன எடை கொண்ட சரக்கு லாரிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.  மொத்த வாகன எடையின் அடிப்படையில் அதிகபட்ச ஊக்கத் தொகையாக ஒரு சரக்கு  லாரிக்கு 9,60,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் 5600 மின்சாரத்தில் இயங்கும் கனரக வாகனங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த முன்முயற்சி மின்சார கனரக சரக்கு வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் பயனாளிகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143995

***

AD/TS/GK/AG/SG/DL


(Release ID: 2144086)