விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்

Posted On: 10 JUL 2025 6:56PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று ஆந்திரப் பிரதேச அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இயற்கை வேளாண்மை மற்றும் பாமாயில் இயக்கம் குறித்தும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் அமைச்சர், “இன்று புட்டபர்த்தியில், ஆந்திரப் பிரதேச வேளாண் அமைச்சருடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து ஒரு முக்கியமான சந்திப்பை நடத்தினோம். இந்தப் பகுதி, குறைவான மழைப்பொழிவு மற்றும் அடிக்கடி ஏற்படும் வறட்சி போன்ற சவால்களை எதிர்கொள்கிறது, இது விவசாயத்தையும் விவசாயிகளையும் துயரத்தில் ஆழ்த்துகிறது. முதல்வர் திரு சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சொட்டு நீர் பாசனத்தை ஊக்குவிப்பதில் இருந்து தோட்டக்கலையை மேம்படுத்துவது வரை பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை ஆந்திரப் பிரதேச அரசு எடுத்துள்ளது” என்றார்.

 

"முந்தைய அரசு மத்திய நிதியை திசை திருப்பியது, இது விவசாயிகளுக்கு மிகவும் அநீதியானது. ஆனால் தற்போதைய அரசு அதை மாற்றுவதற்காகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்ட முதலமைச்சர் பதவியில் இருப்பதால், இந்த ராயலசீமா மாவட்டங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், நிலையான தீர்வை எட்டவும், குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை வகுப்பது பற்றியும் நாங்கள் ஆலோசித்தோம்."

 

பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முதலில், ஐ.சி.ஏ.ஆர் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் துறை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் உட்பட மத்திய அரசின் குழு ஆந்திராவிற்கு அனுப்பப்படும். வேளாண்மை, ஐ.சி.ஏ.ஆர், கிராமப்புற மேம்பாடு மற்றும் நீர்நிலை மேலாண்மை உள்ளிட்ட நில வளத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய இந்தக் குழு, வறட்சியால் பாதிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் பயிர்களை பயிரிடுவதற்கான திட்டத்தை வரைவு செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

 

“மழைநீர் சேகரிப்பு, காடு வளர்ப்பு, ஜல் சக்தி அமைச்சகத்துடன் இணைந்து துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிகளில் இருந்து தண்ணீரை இந்தப் பகுதிக்கு எவ்வாறு கொண்டு வர முடியும் என்பதை ஆராய்வோம். பழங்கள், பூக்கள், காய்கறிகள், வேளாண் காடுகள், தேனீ வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த விவசாயத்தின் கீழ், பல புதிய முயற்சிகள் எடுக்கப்படும். கூடுதலாக, வறட்சி நிலைகளிலும் நல்ல மகசூல் தரும் விதை வகைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்”, என்றார் அவர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143812

 

----

(Release ID: 2143812)

AD/RB/ DL


(Release ID: 2143868)