எரிசக்தி அமைச்சகம்
இந்திய மின் துறைக்கான வலுவான டிஜிட்டல் அமைப்பை உருவாக்க 'இந்திய எரிசக்தித் தொகுப்பு' என்ற கட்டமைப்பை மின்துறை அமைச்சகம் உருவாக்குகிறது
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைப்பதிலும் விநியோக செயல்திறனை மேம்படுத்துவதிலும் இந்திய எரிசக்தி தொகுப்பு முக்கிய பங்கு வகிக்கும்: மத்திய அமைச்சர் திரு மனோகர் லால்
Posted On:
28 JUN 2025 4:20PM by PIB Chennai
இந்திய எரிசக்தித் துறைக்கு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான, டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாக இந்தியா எரிசக்தி தொகுப்பு (IES) என்ற கட்டமைப்பை உருவாக்க ஒரு பணிக்குழுவை அமைப்பதாக மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் செல்கிறது. நிகர பூஜ்ஜிய உமிழ்வு உறுதிமொழிகளை நோக்கி இந்தியா முன்னேறும்போது, மின் துறை பெரிய வாய்ப்புகளையும் சிக்கலான சவால்களையும் எதிர்கொள்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், எரிசக்தி சந்தைகளில் நுகர்வோர் பங்கேற்பு ஆகியவற்றில் விரைவான வளர்ச்சி இந்தத் துறையை மாற்றி வருகிறது. ஆனால் துண்டு துண்டான அமைப்புகள் இருப்பதும், தடையற்ற டிஜிட்டல் ஒருங்கிணைப்பு இல்லாததும் முக்கிய தடைகளாகவே உள்ளன.
இவற்றை நிவர்த்தி செய்வதற்காக, மின்சார அமைச்சகம், மின் மதிப்புச் சங்கிலி முழுவதையும் நிர்வகிக்க, ஒரு தரப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான தளமாக, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) எனப்படும் இந்தியா எனர்ஜி ஸ்டேக் (IES -ஐஇஎஸ்) என்ற இந்திய எரிசக்தித் தொகுப்பு மூலம் இத்துறையின் டிஜிட்டல் அடித்தளத்தை வலுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
ஐஇஎஸ் மூலமான நன்மைகள்:
*நுகர்வோர், சொத்துக்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்குத் தனித்துவமான அடையாளங்கள்
* உடனடி, ஒப்புதல் அடிப்படையிலான தரவு பகிர்வு
* தடையற்ற ஒருங்கிணைப்புக்கான திறந்த நடைமுறை
* நுகர்வோர் அதிகாரமளித்தல், சந்தை அணுகல் மற்றும் புதுமைக்கான அம்சங்கள்
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால், நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், மின்துறையில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும் மின் துறையில் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அவசரத் தேவை உள்ளது என்றார். இந்தியா எனர்ஜி ஸ்டேக் (IES - ஐஇஎஸ்) எனப்படும் இந்திய எரிசக்தித் தொகுப்பு போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைப்பதிலும், விநியோகச் செயல்திறனை மேம்படுத்துவதிலும், வெளிப்படையான, நம்பகமான மின் சேவைகளை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.
ஐஇஎஸ் தொடர்பான முயற்சிகளை வழிநடத்த, மின்துறை அமைச்சகம் தொழில்நுட்பம், மின் துறை மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக பணிக்குழுவை அமைத்துள்ளது.
பணிக்குழு தொடர்பான விவரங்களைக் காண இந்த இணையதள இணைப்பைப் பார்க்கவும்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jun/doc2025628578101.pdf
****
(Release ID: 2140416)
AD/TS/PLM/SG
(Release ID: 2140429)