ஆயுஷ்
யோகா தளம் 50,000 பதிவுகளைத் தாண்டியுள்ளது, இது தேசிய நல்வாழ்வு இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது
Posted On:
10 JUN 2025 4:45PM by PIB Chennai
முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இந்தியாவின் தலைமைத்துவத்திற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாக, ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள 11-வது சர்வதேச யோகா தின நிகழ்வு ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து 50,000-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜூன் 21, 2025 அன்று காலை 6:30 மணி முதல் காலை 7:45 மணி வரை யோகா சங்கமத்தை நடத்த பதிவு செய்துள்ளன. இது கூட்டு பங்கேற்புக்கான புதிய அளவுகோலை உருவாக்கி உள்ளது.
யோகா சங்கமம் 2025க்கு பதிவு செய்யப்பட்ட 11,000+ அமைப்புகளுடன் ராஜஸ்தான் இதில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பங்கேற்பைத் தொடர்ந்து தெலுங்கானா 7,000-க்கும் மேற்பட்ட பதிவுகளுடனும், மத்தியப் பிரதேசம் 5,000-க்கும் மேற்பட்ட பதிவுகளுடனும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
இந்த ஆண்டின் கருப்பொருள் 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா' என்பது ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுக்கான உலகளாவிய அழைப்பை எதிரொலிக்கிறது. ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற முதன்மையான நிறுவனங்கள், பல பெரு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து, உலகளாவிய நல்வாழ்வுக்கான தங்கள் உறுதிப்பாட்டை தீவிரமாகப் பதிவு செய்து வெளிப்படுத்தி வருகின்றன. இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் முந்தைய பதிப்புகளின் வெற்றிகரமான பரவலாக்கப்பட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை. ஆயுஷ் அமைச்சகம் Yoga.ayush.gov.in/yoga-sangam என்ற யோகா சங்கமம் தளம் மூலம் பொதுமக்களின் ஈடுபாட்டை மேம்படுத்துகிறது.
இந்தத் தளத்தின் மூலம் யோகா சங்கமத்தில் உங்கள் குழு அல்லது அமைப்பை பதிவு செய்து, பங்கேற்கலாம்.
ஜூன் 21, 2025 அன்று காலை 6:30 மணி முதல் காலை 7:45 மணி வரை யோகா அமர்வை நடத்த வேண்டும்.
அதிகாரப்பூர்வ பாராட்டுச் சான்றிதழைப் பெற நிகழ்வுக்குப் பிறகு பங்கேற்பு விவரங்களைப் பதிவேற்றவும்.
சர்வதேச யோகா தின நிகழ்வு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், யோகா சங்கமம் 2025, இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தின் இந்த உலகளாவிய கொண்டாட்டத்தில் மக்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் ஒன்று சேர ஆயுஷ் அமைச்சகம் அழைக்கிறது. ஆரோக்கியமான, இணக்கமான உலகத்திற்காக நாம் ஒன்றாக நகர்வோம், ஒன்றாக சுவாசிப்போம், ஒன்றாக முன்னேறுவோம்.
***
(Release ID: 2135392)
AD/TS/PKV/RR/KR/DL
(Release ID: 2135448)