வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானியுடன் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்மட்ட அளவிலான சந்திப்பை நடத்தினார்

Posted On: 06 JUN 2025 2:41PM by PIB Chennai

இத்தாலியின் தொழில் உற்பத்தி மையமான பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானியுடன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்நிலை சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார்.  2025 ஜூன் 5 அன்று நிறைவடைந்த இத்தாலி பயணத்தின் போது பொருளாதார ஒத்துழைப்புக்கான  இந்தியா – இத்தாலி கூட்டு ஆணையத்தின் 22-வது அமர்வுக்கு இருதலைவர்களும் கூட்டாகத் தலைமை தாங்கினர்.

ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டு உணர்வுடனும் பரஸ்பர குறிக்கோளுடனும் இருதரப்பிலுமிருந்து மூத்த அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், பங்குதாரர்கள் இந்த கூட்டு ஆணையக் கூட்டத்தில்  கலந்து கொண்டனர். இதில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை உறுதி செய்தது. பொருளாதார நெகிழ்வுத் தன்மை, தொழில்துறை கூட்டாண்மைகள், அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான 2025-29 காலத்திற்கான உத்திசார் கூட்டு செயல்திட்டத்திற்கு இணங்க இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியாவும் இத்தாலியும் வேளாண்மை, உணவுப் பதப்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி பூண்டன.  மோட்டார் வாகன தொழில் துறையிலும் விண்வெளித்துறையிலும் கூட்டுப் பணிக்குழுக்களை அமைக்கவும் தீர்மானித்தன.  நீடிக்கவல்ல வேளாண் மதிப்புக் கூட்டல் சங்கிலித் தொடர்கள், வேளாண் எந்திரவியல், உணவு பேக்கேஜிங் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பு வாய்ப்புகளை இரு நாடுகளும் அடையாளம் கண்டன. பசுமை ஹைட்ரஜன், உயிரி எரிபொருள் போன்ற துறைகளில் கூட்டாக செயல்படவும் ஒப்புக் கொண்டதோடு இருநாடுகளுக்கு இடையே திறன் வாய்ந்த தொழில் முறையாளர்களை பகிர்ந்து கொள்வதற்கும் விருப்பத்தை வெளிப்படுத்தின.

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பிரெசியாவில் உள்ள கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் முதன்மை நிறுவனத்தை திரு பியூஷ் கோயலும், துணைப்பிரதமர் திரு தஜானியும் பார்வையிட்டனர். அடையாளப்பூர்வ நிகழ்வாக யுனெஸ்கோ பாரம்பரிய வளாகமான சாந்தா கிலியாவில் தங்கள் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டத்தின் கீழ், இருதலைவர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.

------

(Release ID: 2134491)

AD/TS/SMB/KPG/KR


(Release ID: 2134569)