கனரகத் தொழில்கள் அமைச்சகம்
இந்தியாவில் பயணிகளுக்கான மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2025 2:04PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், மத்திய அரசு, மின்சார வாகனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, உள்நாட்டு பயணிகள் வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஒரு எதிர்கால திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சி 2070 ஆம் ஆண்டுக்குள், நீடித்த நிலையான போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் பூஜ்ஜிய உமிழ்வு நிலையை அடைதல் என்ற இந்தியாவின் தேசிய இலக்குகளுடன் இணைந்துள்ளது. வாகன உற்பத்தி மற்றும் புத்தாக்கத்துக்கு உலகளவில் விரும்பப்படும் இடமாக இந்தியாவை முன்னிறுத்துவதை நோக்கமாக கொண்டு இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
"இந்தியாவில் பயணிகளுக்கான மின்சார வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கான" விரிவான வழிகாட்டுதல்கள் குறித்த அறிவிப்பை கனரக தொழில்துறை அமைச்சகம் 2024 மார்ச் 15 அன்று வெளியிட்டது. நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையும் 2024 மார்ச் 15 அன்று இந்தத் திட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப இறக்குமதி வரிகளைக் குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருங்கால விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இந்தத் திட்டம் உலகளாவிய மின் வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவை மின் வாகனங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்றவும் உதவும். இந்தத் திட்டம், மின்வாகன உற்பத்திக்கான உலகளாவிய திட்டத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், "இந்தியாவில் தயாரிப்போம்" என்ற இலக்கை அடையவும் உதவும். அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த திட்ட விதிகளின்படி குறைந்தபட்சம் ரூ. 4,150 கோடி முதலீடு செய்ய வேண்டும்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மத்திய அமைச்சர் திரு. எச்.டி. குமாரசாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ், கனரகத் தொழில்கள் அமைச்சகமானது மின்சார வாகனங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, உள்நாட்டு பயணிகள் வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஒரு எதிர்காலத் திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக கூறினார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133258
AD/TS/GK/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2133266)
வருகையாளர் எண்ணிக்கை : 27