விவசாயத்துறை அமைச்சகம்
வளர்ச்சி அடைந்த விவசாயத்துக்கான சங்கல்ப இயக்கம் - புவனேஸ்வரில் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தொடங்கி வைத்தார்
Posted On:
29 MAY 2025 5:54PM by PIB Chennai
இந்தியாவில் விவசாயத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மைல்கல் முயற்சியாக, மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் (ICAR-CIFA - ஐசிஏஆர் - சிஐஎஃப்ஏ) விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான் எனப்படும் வளர்ச்சி அடைந்த விவசாயத்துக்கான சங்கல்ப இயக்கத்தைத் (VKSA-2025, விகேஎஸ்ஏ -2025) தொடங்கி வைத்தார்.
இந்த இயக்கம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுயசார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது. நாடு முழுவதும் மேம்பட்ட விவசாய, மீன்வள செயல்பாடுகளில் புதிய தொழில்நுட்பங்களை பரவலாக ஏற்றுக்கொள்வதை இது ஊக்குவிக்கும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சௌகான், தொழில்நுட்ப பரவல், திறன் மேம்பாடு, அடித்தள அளவிலான ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் இந்தியா முழுவதும் 1.5 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற லட்சிய இலக்குடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்தார். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த தூணாகவும், வாழ்வாதார மேம்பாட்டிற்கான ஒரு சிறந்த வழியாகவும் மீன்வளத் துறை உள்ளது என்று அவர் கூறினார். ஐசிஏஆர் - சிஐஎஃப்ஏ-வால் உருவாக்கப்பட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொடக்க விழாவில் ஒடிசா அரசின் துணை முதலமைச்சரும் வேளாண் அமைச்சருமான திரு கனக் வர்தன் சிங் தியோ, ஒடிசா அரசின் மீன்வளத் துறை அமைச்சர் திரு கோகுலானந்த மல்லிக், ஐசிஏஆர் தலைமை இயக்குநர் டாக்டர் எம்.எல். ஜாட் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விகேஎஸ்ஏ-2025 இயக்கம் இன்று (2025 மே 29) முதல் 2025 ஜூன் 12 வரை நாடு தழுவிய அளவில் தொடர்ந்து நடைபெறும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து எதிர்காலத்திற்குத் ஏற்ற விவசாய முறையை உருவாக்கும் நோக்கில் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.
***
AD/TS/PLM/KPG/DL
(Release ID: 2132497)