பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
நாட்டில் பழங்குடியினர் மேம்பாட்டில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு அனைத்து வாய்ப்புகளும் பயன்படுத்தப்படும் என்று மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜுவல் ஓரம் தெரிவித்துள்ளார்
Posted On:
27 MAY 2025 8:57AM by PIB Chennai
நாட்டில் பழங்குடியினர் மேம்பாட்டில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு அனைத்து வாய்ப்புகளும் பயன்படுத்தப்படும் என்று மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜுவல் ஓரம் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை 2024 நவம்பர் 15 முதல், 2025 நவம்பர் 15 வரை பழங்குடியினர் கௌரவ ஆண்டாக கொண்டாட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் ஆய்வு நிறுவனங்கள் மூலம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆண்டு முழுவதும் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. பழங்குடியின தலைவர்கள் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கும், தேசத்தின் கட்டுமானத்திற்கும் ஆற்றியிருக்கும் பங்களிப்புகள் இந்த கொண்டாட்டங்களில் போற்றப்படுகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.
18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள குறிப்பாக பாதிக்கப்படும் 75 பழங்குடி குழுக்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கான பிரதமரின் ஜன்மன் திட்டத்திற்கு ரூ.24,104 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.15,336 கோடியாகவும், மாநிலங்களின் பங்கு ரூ.8,768 கோடியாகவும் இருக்கும் என்று அமைச்சர் கூறினார். பாதுகாப்பான வீட்டுவசதி, தூய்மையான குடிநீர், விரிவான கல்வி, சத்துணவு, சாலை இணைப்பு, மின்சாரம், நீடிக்கவல்ல வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவற்றை மூன்றாண்டு காலத்திற்குள் வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
30 லட்சம் பழங்குடியின மாணவர்கள் ஆண்டுதோறும் பயன்படும் வகையில் 5 கல்வி உதவித் திட்டங்களை தமது அமைச்சகம் செயல்படுத்துவதாக தெரிவித்த திரு ஜுவல் ஓரம், இந்தத் திட்டங்களின் கீழ் இளமுனைவர் (எம்.ஃபில்), முனைவர் (பிஎச்டி) பட்டப்படிப்புகளில் 2,700 பேருக்கும், வெளிநாடுகளில் கல்வி கற்க 58 பேருக்கும் முதல்நிலை கல்வித் திட்டத்தில் 7000 பேருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதாக கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்கா தாஸ் யுகேவும் பங்கேற்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131518
***
AD/TS/SMB/AG/RJ
(Release ID: 2131586)