வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புத்தொழில் நிறுவனங்களுக்கான மூலதனங்களை அதிகரிக்க, கடன் உத்தரவாதத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
Posted On:
09 MAY 2025 11:32AM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவாதக் காப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பு 10 கோடி ரூபாயிலிருந்து 20 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 10 கோடி வரையிலான கடன் தொகைக்கு வழங்கப்படும் உத்தரவாதப் பாதுகாப்பு, கடனை திரும்பச் செலுத்தத் தவறும் தொகையில் 85% - ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் உத்தரவாதப் பாதுகாப்பு 10 கோடிக்கும் அதிகமான கடன் தொகைக்கு 75% - ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 27 முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கான வருடாந்திர உத்தரவாதக் கட்டணம் ஆண்டொன்றுக்கு 2% -லிருந்து, 1% - மாகக் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் உற்பத்தி, சேவைத் துறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தகைய துறைகளில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கான வருடாந்திர உத்தரவாதக் கட்டணக் குறைப்பு, அரசால் அடையாளம் காணப்பட்ட துறைகளுக்கு நிதியுதவியை ஈர்ப்பதற்கு, உள்நாட்டு உற்பத்தி மற்றும் சுயசார்பு நிலையை எட்டுவதற்கும் உதவிடும்.
இந்தியாவை புதுமை சார்ந்த சுயசார்பு பொருளாதார நாடாக உருவெடுக்கச் செய்ய வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விரிவாக்க நடவடிக்கைகள் புதுமை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதிகரிபட்டுள்ள உத்தரவாதக் காப்பீட்டு பாதுகாப்பின் காரணமாக, புத்தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க முன்வரும் நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் புத்தொழில் நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த நிதிசார் நடவடிக்கைகளும் அதிகரிக்கும்.
விரிவாக்கப்பட்ட உத்தரவாதத் திட்டம், அமைப்பு ரீதியிலான நிதி நிறுவனங்களில் இருந்து புத்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் தொடர்புடையதாகக் கருதப்படும் அபாயங்களை குறைப்பதுடன், மேலும் அதிக நிதிசார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், புத்தொழில் நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பரிசோதனை, அதிநவீன கண்டுபிடிப்பு, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான வழி வகையையும் வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127843
***
TS/SV/RR/KR
(Release ID: 2127855)