பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயர்தர உபகரணங்களுடன் நமது வலிமைமிக்க மற்றும் தொழில்முறை பயிற்சி பெற்ற ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Posted On: 08 MAY 2025 5:53PM by PIB Chennai

உயர்தர உபகரணங்களுடன் எங்களின் வலிமைமிக்க மற்றும் தொழில்முறை பயிற்சி பெற்ற ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாக புதுதில்லியில் இன்று (2025 மே 08) நடைபெற்ற தேசிய தர மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  எந்த ஒரு அப்பாவி மனிதருக்கும் தீங்கு விளைவிக்காமல், குறைந்தபட்ச சேதத்துடன் ஆயுதப்படைகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். இது கற்பனை செய்ய முடியாதது, தேசத்திற்கு மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், தரம் வாய்ந்த இந்த நடவடிக்கை தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கை காட்டுகிறது என்றும் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தியா எப்போதும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பொறுப்புள்ள தேசமாக செயல்பட்டு வருகிறது என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அது நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த நிதானத்தை யாராவது பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தால், அவர்கள் 'தரமான நடவடிக்கையை' எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறினார். இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எந்த வரம்பும் மத்திய அரசிற்கு ஒரு தடையாக மாறாது என்று அவர் உறுதியளித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற பொறுப்பான பதில்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

உலகெங்கிலும் பாதுகாப்புத் துறையில் காணப்படும் புதிய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, விரைவான தர மதிப்பீடு காலத்தின் தேவை என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பாதுகாப்பு இறையாண்மை என்ற தத்துவத்தின் அடிப்படையில், 2014 முதல் பாதுகாப்பு உற்பத்தித் துறையை மேம்படுத்துவதில் மத்திய அரசு  மேற்கொண்டுள்ள முக்கியத்துவத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் எடுத்துரைத்தார். பாதுகாப்பு இறையாண்மை என்பது ஒரு நாடு அதன் பாதுகாப்புத் தேவைகளில் திறமையானதாகவும், தன்னிறைவு அடையும் வரையிலும் அதன் சுதந்திரம் முழுமையானதாகக் கருதப்படாது. வெளிநாட்டிலிருந்து ஆயுதங்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களை வாங்கினால், நாம் நமது பாதுகாப்பை வேறொருவரின் தயவில் விட்டுவிடுகிறோம். நமது அரசு அதைப் பற்றி தீவிரமாக சிந்தித்து, தன்னிறைவை அடைய ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது. விரிவடைந்து வரும் பாதுகாப்பு தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியாவிற்கு முன் எப்போதும் இல்லாத பலத்தை வழங்குகிறது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உறுதிபட கூறினார்.

பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிகள் 2024-25 நிதியாண்டில் சுமார் ரூ.24,000 கோடி என்ற சாதனை அளவைத் தாண்டியுள்ளதாகவும், 2029 ஆம் ஆண்டுக்குள் இந்த மதிப்பை ரூ.50,000 கோடியாக உயர்த்துவதே தங்களின் நோக்கம் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் குறிப்பிட்டார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாகவும் உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்றுமதியாளராகவும் மாற்றுவதே இலக்கு என்றும், அதை அடைய, நமது பாதுகாப்பின் தரம் குறித்து உலகளாவிய நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127735

***

SM/GK/SG/KR/DL


(Release ID: 2127781) Visitor Counter : 2