பாதுகாப்பு அமைச்சகம்
கூட்டுப் போர் ஆய்வுகளுக்கான மையம் நடுத்தர தொலைவிற்கான தரையிலிருந்து விண்ணில் செலுத்தும் ஏவுகணை - இந்தியாவின் சூழல் அமைப்பு குறித்த உச்சி மாநாடு 2.0
Posted On:
08 MAY 2025 10:44AM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள மானேக்ஷா மையத்தில், ஏரோஸ்பேஸ் சர்வீசஸ் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றுடன் கூட்டுப் போர் ஆய்வுகளுக்கான மையம் இணைந்து, நடுத்தர தொலைவிற்கான தரையிலிருந்து விண்ணில் செலுத்தும் ஏவுகணை குறித்த இந்தியாவின் சூழல் அமைப்பு உச்சி மாநாடு 2.0 - ஐ மே 7 - ம் தேதி
வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஒருநாள் உச்சிமாநாட்டில், இந்தியாவின் பாதுகாப்புச்சூழல் அமைப்பின் முக்கிய நட்பு நாடுகளை ஒன்றிணைத்து, தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் போன்ற முன்முயற்சிகளின் கீழ் நாட்டின் விண்வெளி மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதாக அமைந்தது. இந்த மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சகம், ஆயுதப்படைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் மற்றும் நாட்டில் உள்ள முன்னணி பாதுகாப்புச் சாதன உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கான உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நாட்டின் முதன்மையான பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கானத் தொலைநோக்கு பார்வையை ஏரோஸ்பேஸ் சர்வீசஸ் இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த உச்சிமாநாடு, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில், முக்கியத் தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள் உரையாற்றினர். இந்தியா - இஸ்ரேல் நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெற்றன. உச்சிமாநாட்டின் முக்கிய அமர்வுகள் பின்வருமாறு:
• ஏவுகணை அமைப்புகளில் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் சுயசார்பு தொடர்பான குழு விவாதங்கள்.
• ஏரோஸ்பேஸ் சர்வீசஸ் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் செயல்படக்கூடிய ஸ்டார்ம்ஸ் போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் சேவை மேலாண்மை அமைப்புகளைக் கொண்ட நவீன தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துவது.
• உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் நீண்டகால திறனை வளர்ப்பது குறித்த தொழில்துறை சார்ந்த கலந்துரையாடல்கள்.
நடுத்தர தொலைவிற்கான தரையிலிருந்து விண்ணில் செலுத்தும் ஏவுகணை அமைப்பு மற்றும் பாராக் - 8 ஏவுகணை, வான் பாதுகாப்பு தீ கட்டுப்பாட்டு ரேடார் போன்ற அதனுடன் தொடர்புடைய துணை அமைப்புகளுக்கு தொழில்நுட்ப பிரதிநிதித்துவம், நீண்டகால ஆதரவு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏரோஸ்பேஸ் சர்வீசஸ் இந்தியா - இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் அமைப்புக்களின் முழு உரிமையாளரான இந்திய துணை நிறுவனத்தின் சாதனைகள் குறித்தும் இந்த உச்சிமாநாடு எடுத்துரைத்தது. நீடித்த ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, உள்நாட்டுக் கண்டுபிடிப்புகள் மூலம் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய எதிர்காலத்திற்குத் தேவையான வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த மாநாடு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127642
***
SM/SV/RJ/KR
(Release ID: 2127653)
Visitor Counter : 13