ஆயுஷ்
azadi ka amrit mahotsav

மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழுமம் இரண்டு அரிய ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளை உயிர்ப்பித்துள்ளது: திரவியரத்னாகர நிகண்டு மற்றும் திரவியநாமகாரா நிகண்டு

Posted On: 07 MAY 2025 2:44PM by PIB Chennai

பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியாவின் வளமான மரபைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழுமம், இரண்டு அரிய மற்றும் குறிப்பிடத்தக்க ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளான  திரவியரத்னாகர நிகண்டு, திரவியநாமகாரா நிகண்டு ஆகியவற்றை உயிர்ப்பித்துள்ளது.

இவை மும்பையில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்வின் போது வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் புதுதில்லியில் உள்ள மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் திரு ரபிநாராயண் ஆச்சார்யா கலந்துகொண்டு, பாரம்பரிய ஆயுர்வேத இலக்கிய மீட்பு, மின்னணுமயமாக்கல், ஆராய்ச்சி ஆகியவற்றில்  மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து முக்கிய உரை நிகழ்த்தினார்.

 இந்தியாவின் பண்டைய ஞானத்தை சமகால ஆராய்ச்சி கட்டமைப்புகளுடன் இணைப்பதில் இத்தகைய மீட்டெடுப்புகளின் முக்கியத்துவத்தை அவர் தனது உரையில் வலியுறுத்தினார். இந்த நூல்கள் வெறும் வரலாற்று கலைப்பொருட்கள் மட்டுமல்ல. அவை வாழும் அறிவுப் பொக்கிஷகள் என்றும், அவற்றைப் படித்து சிந்தனையுடன் பயன்படுத்தப்படும்போது சமகால சுகாதார அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் கூறினார்.

இந்த கையெழுத்துப் பிரதிகளை புகழ்பெற்ற கையெழுத்துப் பிரதி வல்லுநரும் மூத்த ஆயுர்வேத நிபுணருமான மும்பையைச் சேர்ந்த டாக்டர் சதானந்த் டி. காமத் திருத்தி மொழிபெயர்த்துள்ளார்.

இந்த முக்கியமான பதிப்புகள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆயுர்வேதத்தை பின்பற்றுவோருக்கு விலைமதிப்பற்ற வளங்களாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அறிவார்ந்த ஆய்வு மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ இலக்கியங்களுடன் ஆழமான ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் செய்யும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2127487

***

TS/IR/AG/KR


(Release ID: 2127510) Visitor Counter : 35