இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் நடைபெற்ற ஃபிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சியில் 750 பேர் பங்கேற்ற சிறப்பு நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா தலைமை தாங்கினார்

Posted On: 04 MAY 2025 3:05PM by PIB Chennai

புதுதில்லி  மேஜர் தியான்சந்த் தேசிய மைதானம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உடற்பயிற்சி மற்றும் உத்வேகத்தின் கொண்டாட்டமாக மாறியது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ஃபிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதலின் சமீபத்திய பதிப்பில் ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள்,  உடற்பயிற்சி பிரியர்கள் உட்பட 750 பங்கேற்பாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா தலைமை தாங்கினார். மத்திய விளையாட்டுத்துறை  செயலாளர் திரு. ஹரி ரஞ்சன் ராவ், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தஹியா, ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தீபக் புனியா, கின்னஸ் உலக சாதனையாளர் ரோஹ்தாஷ் சவுத்ரி (இந்தியாவின் புஷ்-அப் மேன்) மற்றும் சமீபத்தில் உலகின் 10-வது உயரமான அன்னபூர்ணா மலையை 12 நாட்களில் சாதனை நேரத்தில் எட்டிப்பிடித்து வென்ற புகழ்பெற்ற மலையேறுபவர் நரேந்தர் குமார் உள்ளிட்டோருடன்  அமைச்சர்  சைக்கிள் ஓட்டினார்.

இந்த வாரத்தின் கருப்பொருளான 'ஆசிரியர்களுடன் சைக்கிள் ஓட்டுதல்' என்ற நிகழ்வில், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட நகரம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் கல்விப் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

“ஆசிரியர்கள் நமது மாணவர்களுக்கு ஹீரோக்கள், இப்போது, நீங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஹீரோக்களாக மாற வேண்டும். நீங்கள் அனைவரும் சைக்கிள் ஓட்டுவதை ஒரு ஃபேஷனாக மாற்றலாம், மேலும் அனைத்து ஆசிரியர்களும் மீண்டும் சைக்கிள்களைப் பயன்படுத்துவதைத் தொடங்கவும், மாணவர்களைப் பின்பற்றவும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் டிஜிட்டல் யுகத்தில் இருக்கிறோம், ஆனால் நமது உடல் தகுதியையும் மேம்படுத்த வேண்டும். எனவே, டிஜிட்டல் செயல்பாட்டிலிருந்து உடல் செயல்பாடுகளுக்கு மாற வேண்டும். இது 'உடல் பருமனுக்கு எதிரான போராட்டம்' என்ற நோக்கத்தையும், நமது பிரதமர் திரு நரேந்திர மோடி வகுத்துள்ள ஃபிட் இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா  என்ற தொலைநோக்குப் பார்வையையும் உறுதி செய்யும், ”என்று பங்கேற்பாளர்களிடம் உரையாற்றும் போது டாக்டர் மண்டவியா கூறினார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்வு  இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு , MY Bharat மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து ஆசிரியர்களுடன் நடத்தப்பட்டது.  இந்திய உடற்கல்வி அறக்கட்டளை, தில்லி பல்கலைக்கழகம், CBSE மற்றும் CISCE வாரியங்கள், கேந்திரிய வித்யாலயா, தேசிய முற்போக்கு பள்ளி மாநாடு, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், யோகாசன இந்தியா, இந்திய கயிறு ஸ்கிப்பிங் அறக்கட்டளை ஆகியவையும் இதில் இணைந்துள்ளன.

மல்யுத்த நட்சத்திரங்கள் ரவி தஹியா மற்றும் தீபக் புனியா ஆகியோர் கூட்டத்தினருடன் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டனர், இளைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் இருவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உடல் தகுதியை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

‘’ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’’ முயற்சி டிசம்பர் 2024 இல் தொடங்கப்பட்டதிலிருந்து 5000_ க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து 2.5 லட்சம் பங்கேற்பைத் தொட்டுள்ளது. சைக்கிள் ஓட்டுதல் ஓட்டத்தின் பரந்த விரிவாக்கம் அந்தமான் மற்றும் நிக்கோபார், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் மற்றும் லட்சத்தீவுகள் போன்ற இடங்களை இந்த நிகழ்வு சென்றடைந்துள்ளது. நாடு தழுவிய அளவில் நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.

****

(Release ID: 2126743)

SM/PKV/RJ


(Release ID: 2126767) Visitor Counter : 26