வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025 இறுதிக்குள் லட்சிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும் உத்திசார் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவதற்குமான உறுதிப்பாட்டை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன

Posted On: 02 MAY 2025 10:24AM by PIB Chennai

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஐரோப்பிய வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆணையர் திரு. மரோஸ் செஃப்கோவிச் ஆகியோர் உலகளாவிய வர்த்தக சவால்களை சரி செய்வதற்கும், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்குமான தங்களின் உறுதியை மீண்டும் வலியுறுத்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2025, பிப்ரவரியில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்கள் குழுவின் வரலாற்றுச் சிறப்புமிக்க புதுதில்லி வருகையின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனும்  வழங்கிய உத்திசார் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த உறுதிப்பாடு கட்டமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார உறுதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிக்கின்ற, வணிக ரீதியாக அர்த்தமுள்ள, பரஸ்பர நன்மை பயக்கின்ற, சமநிலையான மற்றும் நியாயமான வர்த்தக கூட்டாண்மையை உருவாக்குவதற்கு இரு தரப்பினரும் கொண்டிருக்கும் உத்திசார் முக்கியத்துவத்தை இந்த உயர் நிலை ஈடுபாடு சுட்டிக்காட்டுகிறது. பல பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இந்த சந்திப்பு எடுத்துக்காட்டியதுடன், மாதாந்தர பேச்சுவார்த்தை சுற்றுகள் மற்றும் தொடர்ச்சியான மெய்நிகர் ஈடுபாடு மூலம் தற்போதைய உந்துதலைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தங்கள் நோக்கத்தை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.  இதில் 2025 மே 12-16 வரை புது தில்லியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அடுத்த சுற்றும் அடங்கும். 

வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்பட, வரி விவாதங்களுடன் வரி அல்லாத தடைகள் மீது சமமான கவனம் தேவை என்றும், ஒழுங்குமுறை கட்டமைப்புகள், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும்,  வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதைத் தவிர்க்கவும் வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பின், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உத்திசார் கூட்டாண்மையின் மாற்றத்திற்கு இது ஒரு தூணாக செயல்படும் என்றும், சந்தை அணுகலை மேம்படுத்துதல், ஒழுங்குமுறை ஒத்துழைப்பை ஆதரித்தல் மற்றும் இரு தரப்பிலும் புதுமை மற்றும் போட்டித்தன்மையை வளர்க்கும் என்றும் இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர். 

உலகிற்கு ஒரு பங்காளியாக - "விஸ்வ மித்ரா"வாக - உருவாகி வரும் இந்தியா, அதன் 2047 வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்து செயல்படுவதன் உணர்விலும், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் என்பது பன்முகப்படுத்தப்பட்ட உற்பத்தி வலையமைப்புகளை ஊக்குவிப்பதற்கும் நியாயமான வர்த்தகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் ஒரு கருவியாகக் கருதப்படுகிறது. தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா தனது தடத்தை விரிவுபடுத்தி வருவதால், இந்த உரையாடல் தேசிய முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய விருப்பங்களுடன் இணைந்த எதிர்காலத்திற்குத் தயாரான கட்டமைப்பை வடிவமைக்க அதன் பரந்த பார்வையை பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126025 

---  

SM/SMB/KPG/SG


(Release ID: 2126079) Visitor Counter : 21