வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இருதரப்பு வர்த்தகம், பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்காக வர்த்தகச் செயலாளர் திரு சுனில் பர்த்வால் நெதர்லாந்து பயணம்

Posted On: 29 APR 2025 11:17AM by PIB Chennai

இந்தியா, நெதர்லாந்து இடையே இருதரப்பு வர்த்தகம், மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் வர்த்தக செயலாளர் திரு சுனில் பர்த்வால் 2025 ஏப்ரல் 24 முதல் 26 வரை நெதர்லாந்தில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம்முக்கிய ஐரோப்பிய நட்பு நாடான நெதர்லாந்துடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. தமது பயணத்தின்போது, உயர்மட்ட விவாதங்கள், தொழில்துறை கலந்துரையாடல்களில் பங்கேற்ற வர்த்தக செயலாளர் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கும்  பயணம் மேற்கொண்டார்.

வர்த்தகத்துறை செயலாளரின் வருகை பல உறுதியான முடிவுகளை அளித்துள்ளது. உலகப் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதிலும், புத்தாக்கக் கண்டுபிடிப்புகளால் ஏற்படும் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் இந்தியா-நெதர்லாந்து கூட்டாண்மையின் ராஜீய முக்கியத்துவத்தை இது வலியுறுத்தியது. வெளியுறவு அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றில் மேற்கொண்ட  கலந்துரையாடல்கள் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை அமைத்தன. தலைமைச் செயல் அதிகாரிகளின் வட்டமேஜை கூட்டம் புதிய வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தின.  இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நெதர்லாந்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. ரோட்டர்டாம் துறைமுகம் மற்றும் ஏ.எஸ்.எம்.எல் ஆகியவற்றில் நடந்த பேச்சுகள் இந்தியாவின் பொருளாதார முன்னுரிமைகளுடன் இணைந்து, கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் செமிகண்டக்டர்களில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஏற்படுத்தின.

இந்தப் பயணத்தின் சிறப்பம்சமாக இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த தலைமைச் செயல் அதிகாரிகளின் வட்டமேஜை கூட்டம் அமைந்திருந்தது. நெதர்லாந்து மற்றும் இந்திய நாடுகளின் முன்னணி நிறுவனங்கள், வர்த்தக சபைகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் சுமார் 40 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த வட்டமேஜை கூட்டத்தில், வர்த்தக வாய்ப்புகள், சவால்கள் மற்றும் செயல்படக்கூடிய தீர்வுகள் குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.   பங்கேற்பாளர்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினர். இந்திய அரசும், தூதரகமும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்தன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம், சரக்கு போக்குவரத்து, கழிவு மேலாண்மை மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அடையாளம் காணவும், நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், தொழில்துறை தலைவர்களுக்கு இந்த மாநாடு ஒரு தளத்தை வழங்கியது. உற்பத்தி, ஏற்றுமதி, எளிதாக வர்த்தகம் செய்தல் உள்ளிட்ட இந்தியாவின் லட்சிய பொருளாதார சீர்திருத்தங்களை திரு. பர்த்வால் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125060

***

TS/IR/AG/KR


(Release ID: 2125084)
Read this release in: English , Urdu , Hindi , Bengali