குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அனைவரையும் அரவணைத்தலும் கருத்துச் சுதந்திரமும் நமது வளமான மரபு - குடியரசு துணைத்தலைவர்

Posted On: 27 APR 2025 2:49PM by PIB Chennai

"இந்தியா உலகின் பழமையான நாகரிகம் கொண்டது. அமைதியை விரும்புவது. அனைவரையும் அரவணைத்தலும் கருத்துச் சுதந்திரமும் நமது சிந்தனை மரபு" என்று இந்திய குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

"வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேளாண் கல்வி, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோரை வளர்ப்பது" என்ற கருப்பொருளில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கூடியிருந்தவர்களிடம்  இன்று உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றை ஒருவர் கடந்து சென்றால், நமது நாகரிகத்தில் அனைவரையும் அரவணைத்தல் மற்றும் கருத்து சுதந்திரம் செழித்து, மலர்ந்து, மதிக்கப்படுவதைக் காணலாம் என்று குறிப்பிட்டார். தற்போதைய காலகட்டத்தில், கருத்து வெளிப்பாடு மற்றும் அரவணைத்தலின் விகிதாச்சாரமும் சார்பும் உலகிலேயே மிக உயர்ந்ததாக உள்ளது என்று அவர் கூறினார். "சுற்றிப் பாருங்கள், அனைவரையும் அரவணைத்தல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நிரூபிக்க இந்தியாவைப் போல் வேறு எந்த நாடும் இல்லை" என்று அவர் கூறினார். மிகப்பெரிய ஜனநாயகம், பழமையான ஜனநாயகம், மிகவும் துடிப்பான ஜனநாயகம் ஆகிய இந்த மாபெரும் தேசத்தின் குடிமக்களாக, கருத்துச் சுதந்திரமும் அரவணைத்தலும் நமது தேசிய சொத்துக்களாக மாற வேண்டும் என்பதை நாம் மிகவும் கவனமாகவும்உணர்ந்தும் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

வேளாண் துறை பற்றிப் பேசிய குடியரசு  துணைத்தலைவர், "நாம் உணவுப் பாதுகாப்பிலிருந்து விவசாயிகளின் செழிப்புக்கு நகர வேண்டும்" என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். விவசாயி வளமாக இருக்க வேண்டும் என்றும், இந்தப் பரிணாமம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களிலிருந்து தோன்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விவசாயிகள் விவசாய நிலங்களை விட்டு வெளியேறி, விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். "விவசாயிகள் வெறும் உற்பத்தியாளராக இருந்து சந்தையை மறந்துவிடக் கூடாது. அதாவது அவர்கள் கடினமாக, சளைக்காமல் ஒரு விளைபொருளை சேகரித்து, சந்தைக்கு ஏற்ற நேரம் வரை  வைத்திருக்காமல் விற்பனை செய்வார்கள். இது பொருளாதார ரீதியாக அதிக லாபம் தராது," என்று அவர் குறிப்பிட்டார். விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அரசு  கூட்டுறவு அமைப்பு மிகவும் வலுவானது என்பதை அவர்களுக்குத் தெரிவிப்பதன் மூலமும் விவசாயிகளை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

"முதல் முறையாக, கூட்டுறவு அமைச்சர் நம்மிடம் உள்ளார். கூட்டுறவுகள் நமது அரசியலமைப்பில் இடம் பெறுகின்றன. எனவே, நமக்குத் தேவை விவசாய வர்த்தகர்கள். நமக்குத் தேவை விவசாய தொழில்முனைவோர். அந்த மனநிலையை உருவாக்குங்கள். இதனால் ஒரு விவசாயி தன்னை உற்பத்தியாளரிலிருந்து மதிப்பு கூட்டுபவராக மாற்றிக்கொண்டு, குறைந்தபட்ச உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட சில தொழில்களைத் தொடங்குவார்," என்று அவர் கூறினார்.

பண்ணை விளைபொருள் சந்தை மிகப்பெரியது என்றும், பண்ணை விளைபொருட்களுக்கு மதிப்பு சேர்க்கப்படும்போது, ​​தொழில் செழிக்கும் என்றும் குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார்.

தடுத்து நிறுத்த முடியாத அதிவேக பொருளாதார உயர்வு, உள்கட்டமைப்பில் அசாதாரண வளர்ச்சி, கடைசி மைல் வரை தொழில்நுட்ப பரவல், சர்வதேச அளவில் நாட்டின் நற்பெயர், அதன் தலைவர் பிரதமரின் நற்பெயர் ஆகியவை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் இந்த நேரத்தை மனதில் கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று திரு தன்கர் எடுத்துரைத்தார். " குடிமக்களாகிய நாம் நாட்டின் இந்த எழுச்சியைத் தக்கவைக்க பெரிய பங்களிப்பைச் செய்ய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு குடிமகனும் முழுமையாக விழிப்புணர்வைப் பெறவும், நம்பிக்கை மற்றும் சாத்தியக்கூறுகளின் சூழல் அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும் இதுவே சரியான நேரம் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். முதலில் தேசம் என்பது நமது குறிக்கோள். தேசத்திற்கான நமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு என்ற உறுதியான தீர்மானத்தை அனைவரும் எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "எந்தவொரு ஆர்வமும் தேசத்தின் ஆர்வத்தை விட உயர்ந்ததாக இருக்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

விவசாயத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை எடுத்துரைத்த அவர், ஆய்வகத்திற்கும் நிலத்திற்கும் இடையிலான இடைவெளியை வெறுமனே குறைக்கக்கூடாது - அது ஒரு தடையற்ற இணைப்பாக இருக்க வேண்டும் என்றார். "ஆய்வகமும் நிலமும் ஒன்றாக இருக்க வேண்டும், இதற்காக, 730-க்கும் அதிகமான வேளாண் அறிவியல் மையங்கள் விவசாயிகளுடன் தொடர்பு கொள்ளும் துடிப்பான மையங்களாக இருக்க வேண்டும், விவசாயிகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்," என்று அவர் கூறினார். வேளாண்மையின் ஒவ்வொரு அம்சத்திலும் கவனம் செலுத்தும் 150-க்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்ட வேளாண் அறிவியல் மையங்களையும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலையும் இணைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அரசின் முன்முயற்சிகளைப் பாராட்டிய திரு தன்கர், பிரதமரின் விவசாயிகள் கெளரவிப்பு நிதி போன்ற புதுமையான திட்டங்கள் இலவசங்கள் அல்ல, மாறாக நமது வாழ்க்கையைத் தரமாக இருக்கவைக்கும் ஒரு துறைக்கு நீதி செய்வதற்கான நடவடிக்கைகள் என்று குறிப்பிட்டார். "இது விவசாயிக்கு நேரடி பயன் பரிமாற்றம்" என்று அவர் கூறினார்.

 "நமது நாட்டில் உரங்களுக்கு மிகப்பெரிய மானியம் உள்ளது. விவசாயியின் நலனுக்காக உரத் துறைக்கு தற்போது வழங்கப்படும் மானியம் நேரடியாக விவசாயிக்குச் சென்றால், ஒவ்வொரு விவசாயியும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35,000 ரூபாய் பெறுவார் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும்" என்று  திரு தன்கர் கூறினார்.

பரந்த தேசிய தொலைநோக்குப் பார்வையில், "வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் கவனமாக வழிநடத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பு செய்த பல்கலைக்கழகத்தில் தாம் இருப்பது ஒரு பேறு என்று அவர் கூறினார்.

இந்தியா உணவுப் பற்றாக்குறையிலிருந்து உணவு உபரியை நோக்கி நகர்ந்துள்ளது என்று கூறிய அவர்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விவசாய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மாற்றத்திற்கான பரந்த நோக்கத்திற்கு சேவை செய்துள்ளது என்பதை  நினைவு கூர்ந்தார்.

விவசாயத் துறையின் உயர்ந்த ஜாம்பவான்களில் ஒருவரும், இந்தியாவின் பெருமைமிகு மகன்களில் ஒருவருமான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்று பாராட்டினார். டாக்டர் சுவாமிநாதன் நான்கு சிவில் விருதுகளையும் பெற்ற அரிய பெருமையைப் பெற்றுள்ளார், அவற்றில் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவும் அடங்கும் என்று அவர் கூறினார்.

தாக்கம் சார்ந்த புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுத்த அவர், இந்த முயற்சிகள் விவசாயி மீது ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றார். "ஆராய்ச்சி, தேவையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆராய்ச்சி என்பது நீங்கள் அடையாளம் காணும் ஒரு காரணத்திற்கு சேவை செய்ய வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார். ஆராய்ச்சியை மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசு மட்டுமல்ல, தொழில், வர்த்தகம், வணிகம் மற்றும் வர்த்தகமும் ஆதரிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

 நமது இந்தியா- எப்போதும் விவசாய நிலமாக இருந்து வருகிறதுஅதன் இதயம் கிராமங்களில் துடிக்கிறது. இது வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தின் உயிர்நாடி, மற்றும் இந்த வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் தேசத்தின் முதுகெலும்பு என்று உரையை நிறைவு செய்யும்போது கூறினார்.

தமிழ் நிலத்தின் பண்டைய ஞானத்தை நினைவு கூர்ந்த அவர், இந்த புனித பூமியில், விவசாயியின் பங்கை தலைசிறந்த புலவர்  திருவள்ளுவர் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றார் என்றார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி, மாநில மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ்வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் திரு. வி. தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் எம். ரவீந்திரன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் டாக்டர் ஆர். தமிழ் வேந்தன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

*******

(Release ID: 2124709)

SMB/SG

 

 


(Release ID: 2124721) Visitor Counter : 26