ஊரக வளர்ச்சி அமைச்சகம்
அமிர்த நீர்நிலைகள் இயக்கம்
Posted On:
17 APR 2025 5:45PM by PIB Chennai
இந்திய சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு 2022 ஆம் ஆண்டில் அமிர்த நீர்நிலைகள் இயக்கத்தைத் தொடங்கியது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை நிர்மாணித்து புத்துயிர் அளிப்பதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் நீர் சேமிப்பை ஊக்குவித்தல், நிலைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பாரம்பரிய சமூக நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளித்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.
ஆகஸ்ட் 15, 2023க்குள் 50,000 அமிர்த நீர்நிலைகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி தற்போது கிராமப்புற வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நாடு தழுவிய இயக்கமாக மாறியுள்ளது. இது தேசிய பெருமை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் அடிமட்ட நிர்வாகம் ஆகியவற்றின் இணைப்பை பிரதிநிதித்துவம் செய்கிறது. நிலத்தடி நீர் குறைதல்,கிராமப்புற நீர்ப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த இயக்கம் தீர்வாக மாறியுள்ளது.
மார்ச் 2025 நிலவரப்படி, 68,000 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, இது பல்வேறு மண்டலங்களில் நிலத்தடி நீர் இருப்பை மேம்படுத்துகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், 46,000 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் புத்துயிர் பெற்றுள்ளன. இவை உடனடி நீர் தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக நல்வாழ்வுக்கான அரசின் உறுதிப்பாட்டை அடையாளப்படுத்தும் வகையில் நிலையான நீர் ஆதாரங்களாகவும் திகழ்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122478
***
TS/GK/SG/KR/DL
(Release ID: 2122507)