வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2024-25-ம் நிதியாண்டில் அரசு மின்னணு சந்தை மூலம் 1.3 கோடிக்கும் அதிகமான நபர்கள் காப்பீடு செய்துள்ளனர்
Posted On:
16 APR 2025 10:53AM by PIB Chennai
பொது கொள்முதலுக்கான இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு சந்தையான அரசு மின்னணு சந்தை(ஜெம் )24-25-ம் நிதியாண்டில் சேவை வழங்கலில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. 24-25-ம் நிதியாண்டில் 10 லட்சம் மனித வளங்களை பணியமர்த்துவதற்கு வழிவகை செய்ததோடு தவிர, அரசு மின்னணு சந்தை 1.3 கோடிக்கும் அதிகமான தனிநபர்களுக்கு சுகாதாரம், ஆயுள் மற்றும் தனிநபர் விபத்து காப்பீட்டை வெற்றிகரமாக எளிதாக்கியுள்ளது.
அதிக செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் சிக்கனமான செலவு ஆகியவற்றை காப்பீட்டு பாலிசி எடுக்கும்போது உறுதி செய்வதற்காக காப்பீட்டு சேவைகள் என்ற வகைப்பாடு ஜனவரி 2022-ல் அரசு மின்னணு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் மட்டுமே ஜெம் போர்ட்டலில் உள்நுழைய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டு சேவைகளைப் பெறுவதற்கு அரசு மின்னணு சந்தை நம்பகமான நடைமுறையை உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் மூலம், காப்பீடுகளை வாங்குகின்ற நிறுவனங்கள் குழு சுகாதார காப்பீடு , தனிநபர் விபத்து மற்றும் காலமுறை காப்பீடுகளை தடையின்றி வாங்கலாம். இதன் மூலம் ஏராளமான பயனாளிகளுக்கு அந்நிறுவனங்கள் நிதி பாதுகாப்பை வழங்கலாம்.
இது குறித்து கருத்து தெரிவித்த அரசு மின்னணு சந்தையின் தலைமைச் செயல் அதிகாரி திரு அஜய் படூ, "தடையற்ற, பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த கொள்முதல் தீர்வுகளை வழங்குவதற்கான தனது தளத்தை தொடர்ந்து மேம்படுத்த அரசு மின்னணு சந்தை உறுதிபூண்டுள்ளது. 1.3 கோடி காப்பீடு பெற்ற நபர்கள் என்ற மைல்கல், அவர்களின் காப்பீட்டுத் தேவைகளுக்கு அரசு மின்னணு சந்தையை பயன்படுத்துவதில் அரசு அமைப்புகளின் வளர்ந்து வரும் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் பொது கொள்முதலில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக அதன் பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
அரசு மின்னணு சந்தையின் காப்பீட்டு சேவைகளின் ஒரு முக்கிய நன்மை என்னவென்றால், இது அரசு சார்பில் பாலிசி வாங்குபவர்களுக்கும் காப்பீட்டு வழங்குநர்களுக்கும் இடையே இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. இந்த நெறிப்படுத்தப்பட்ட அணுகுமுறை செயல்முறையை கணிசமாக விரைவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில் காப்பீட்டு பிரீமியத் தொகையையும் குறைத்துள்ளது. இதனால் அரசு நிறுவனங்களுக்கு செலவு சேமிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டிற்கு அப்பால், சொத்து காப்பீடு, போக்குவரத்து மற்றும் கடல் காப்பீடு, பொறுப்பு காப்பீடு, கால்நடை காப்பீடு, மோட்டார் காப்பீடு, பயிர் காப்பீடு மற்றும் சைபர் காப்பீடு போன்ற விரிவான காப்பீட்டுச் சேவைகளை உள்ளடக்கிய தனது காப்பீட்டு சேவைகளை இந்த தளம் விரிவுபடுத்தியுள்ளது.
***
(Release ID: 2122023)
TS/IR/RR/KR
(Release ID: 2122035)
Visitor Counter : 44