சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி

Posted On: 14 APR 2025 12:42PM by PIB Chennai

135 வது அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏப்ரல் 14, 2025 அன்று டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையால் , மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலைக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் மற்றும் அறக்கட்டளை தலைவர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற அழைக்கப்பட்ட விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் இன்று காலையில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

 

அதன்பிறகு, நாடாளுமன்ற வளாகத்தின் புல்வெளியில் உள்ள பிரேர்னா ஸ்தலத்தில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கரின் முழு உருவச் சிலைக்கு ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வின் போது, புத்த துறவிகளால் புத்த மந்திரங்கள் ஒலிக்கப்பட்டன, அதே நேரத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கலைஞர்கள் பாபாசாகேப் அம்பேத்கருக்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களை பாடினர்.

 

தொலைநோக்கு பார்வை கொண்ட சமூக சீர்திருத்தவாதி, சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பியின் பிறந்த நாளை அம்பேத்கர் அறக்கட்டளை(டிஏஎஃப் )ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. விளிம்பு நிலை மக்களின் நலனுக்காக அம்பேத்கர் குரல் கொடுத்தார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஜனநாயகம் குறித்த அவரது சிந்தனைகள் இன்னும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திரு பி எல் வர்மா, செயலாளர் திரு அமித் யாதவ் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை

 

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் பரப்புவதற்காக டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை நிறுவப்பட்டது. 1991-ம் ஆண்டில், பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாட்டக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக அப்போதைய இந்தியப் பிரதமர் இருந்தார். இந்தக் குழு டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையை (டிஏஎஃப்) அமைக்க முடிவு செய்தது. மார்ச் 24, 1992 அன்று டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை என்ற தன்னாட்சி அமைப்பு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வைகளையும், சிந்தனைகளையும் நாடு தழுவிய அளவில் முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களையும் செயல்பாடுகளையும் பரவலாக்குவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவகம்

புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர், வரலாற்றாசிரியர், சட்டவியலாளர், மானுடவியலாளர் மற்றும் அரசியல்வாதியான பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை, பணி மற்றும் பங்களிப்புகளை பாதுகாத்து காட்சிப்படுத்துவதற்காக டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவகம் (டி.ஏ.என்.எம்) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தனிப்பட்ட உடமைகள், புகைப்படங்கள், கடிதங்கள் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான ஆவணங்கள், அவரது கல்வி, சமூக சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட ஆவணங்கள் இடம் உள்ளன. அவரது உரைகள் மற்றும் நேர்காணல்களை வெளிப்படுத்த ஒலி-ஒளி கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

****

(Release ID: 2121545)

TS/PKV/KPG/RJ


(Release ID: 2121673) Visitor Counter : 26