குடியரசுத் தலைவர் செயலகம்
ஸ்லோவாக்கியாவில் இந்திய குடியரசுத்தலைவர்; ஸ்லோவாக் குடியரசின் அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு; தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கினார்
Posted On:
09 APR 2025 9:05PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவாக் குடியரசு நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் இறுதிக் கட்டமாக பிராடிஸ்லாவா சென்றடைந்தார். கடந்த 29 ஆண்டுகளில் ஸ்லோவாக் குடியரசுக்கு இந்திய குடியரசுத்தலைவர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும். மத்திய இணையமைச்சர் திருமதி நிமுபென் பம்பானியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. தவால் படேல், திருமதி சந்தியா ரே ஆகியோரும் உடன் வந்துள்ள தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அதிபர் மாளிகைக்கு விஜயம் செய்த குடியரசுத்தலைவரை ஸ்லோவாக் குடியரசின் அதிபர் மேதகு திரு. பீட்டர் பெல்லெகிரினி அன்புடன் வரவேற்றார். நாட்டுப்புற உடையில் ஒரு தம்பதியினர் அவருக்கு ரொட்டி மற்றும் உப்புடன் பாரம்பரிய ஸ்லோவாக் முறையில் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஸ்லோவாக் குடியரசின் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியுடன் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் மற்றும் பகிரப்பட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய நலன்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அதிபர் திரு பெல்லெகிரினியின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் முன்முயற்சிகளை குடியரசுத்தலைவர் பாராட்டினார்.
ஸ்லோவாக்கியாவில் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தின் புகழ் அதிகரித்து வருவதை அவர் குறிப்பிட்டார். ஸ்லோவாக்கியாவை ஒரு படப்பிடிப்பு இடமாகவும், கூட்டு திரைப்பட தயாரிப்பில் ஒரு பங்காளியாகவும் ஊக்குவிப்பது உட்பட, இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரத் துறைகளில் இரு நாடுகளும் மிகவும் நெருக்கமாக ஒத்துழைக்க மகத்தான திறனை அவர் எடுத்துரைத்தார். 2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் இந்தியா நடத்தவிருக்கும் வேவ்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஸ்லோவாக்கியாவுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
என்.எஸ்.ஐ.சி மற்றும் ஸ்லோவாக் வர்த்தக முகமை இடையே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும், எஸ்.எஸ்.ஐ.எஃப்.எஸ் மற்றும் ஸ்லோவாக் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சகத்திற்கு இடையே தூதரக பயிற்சி ஒத்துழைப்பு குறித்தும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஸ்லோவாக் குடியரசின் தேசிய கவுன்சிலின் சபாநாயகர் மேதகு திரு ரிச்சர்ட் ராசியை சந்தித்தார். அண்மையில் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமைக்காக திரு ராசிக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத்தலைவர் , இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான நட்புறவுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா இடையே நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று அவர் கூறினார். ஸ்லோவாக்கியா தேசிய கவுன்சிலில் ஸ்லோவாக்-இந்தியா நட்புறவுக் குழு என்ற பாரம்பரியம் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அனுபவங்களை பரிமாறிக் கொள்வதை ஊக்குவிக்க இது உதவும் என்று கூறினார்.
ஸ்லோவாக் குடியரசின் பிரதமர் மேதகு திரு. ராபர்ட் ஃபிகோவையும் குடியரசுத்தலைவர் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துக்களின் பொதுவான மதிப்புகளின் அடிப்படையில், ஸ்லோவாக் குடியரசுடனான நமது பாரம்பரிய நெருக்கமான மற்றும் நட்புறவுகளை இந்தியா பெரிதும் மதிக்கிறது என்று அவர் கூறினார். துறைகளில் நமது ஈடுபாடுகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். பரஸ்பர நலன் பயக்கும் அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேலும் பன்முகப்படுத்தவும், வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120611
***
(Release ID: 2120611)
RB/DL
(Release ID: 2120626)
Visitor Counter : 38