பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 04 APR 2025 12:59PM by PIB Chennai

மதிப்பிற்குரிய தலைவர்களே,

வணக்கம்!

இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக தாய்லாந்துப் பிரதமர் ஷினவத்ராவுக்கும் தாய்லாந்து அரசுக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிப்பிற்குரியவர்களே,

அண்மையில் மியான்மரிலும் தாய்லாந்திலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் இழப்புகளுக்கு முதலில் இந்திய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய விரும்புகிறோம்.

மதிப்பிற்குரியவர்களே,

கடந்த மூன்று ஆண்டுகளாக பிம்ஸ்டெக் அமைப்பை வழிநடத்திச் செல்வதில் தாய்லாந்து பிரதமர், அவரது குழுவினரின் திறமையான, சிறப்பான தலைமையை நான் பாராட்டுகிறேன்.

தெற்கு, தென்கிழக்கு ஆசியாவுக்கு இடையே முக்கிய பாலமாக பிம்ஸ்டெக் செயல்படுவதுடன், பிராந்திய இணைப்பு, ஒத்துழைப்பு பகிரப்பட்ட வளத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சக்திவாய்ந்த தளமாக இது உருவாகி வருகிறது.

பிம்ஸ்டெக் சாசனம் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. இன்று நாம் ஏற்றுக்கொண்டுள்ள பாங்காக் தொலைநோக்குத் திட்டம் - 2030, வங்காள விரிகுடா பிராந்தியத்தை வளமான, பாதுகாப்பான, உள்ளடக்கிய பகுதியை உருவாக்குவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டை மேலும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.

மதிப்பிற்குரியவர்களே,

பிம்ஸ்டெக் அமைப்பை மேலும் வலுப்படுத்த, அதன் நோக்கத்தை விரிவுபடுத்துவதுடன், அதன் நிறுவன திறன்களை விரிவுபடுத்துவதையும் நாம் தொடர வேண்டும்.

உள்துறை அமைச்சர்களின் அமைப்பு நிறுவனமயமாக்கப்பட்டு வருவது ஊக்கமளிக்கிறது. இணையதளக் குற்றங்கள், இணையதளப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்க முடியும். இது தொடர்பாக, இந்த அமைப்பின் முதல் கூட்டத்தை இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா நடத்த வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.

மதிப்பிற்குரியவர்களே,

பிராந்திய வளர்ச்சிக்கு, நேரடி இணைப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி இணைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செல்ல வேண்டும்.

பெங்களூருவில் அமைந்துள்ள பிம்ஸ்டெக் எரிசக்தி மையம் தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிராந்தியம் முழுவதும் மின் கிரிட் உள்ளிணைப்புக்கு தேவையான முயற்சிகளை நமது குழுக்கள் துரிதப்படுத்த வேண்டும் என்று நான் முன்மொழிய விரும்புகிறேன்.

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) பொதுச் சேவைகளை வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நல்ல நிர்வாகம், அதிகரித்த வெளிப்படைத்தன்மை, விரைவான அனைவரையும்  உள்ளடக்கிய நிதி சேவை ஆகியவற்றைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. எங்களது டிபிஐ அனுபவத்தை பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதை முன்னெடுத்துச் செல்ல, இந்தத் துறையில் பிம்ஸ்டெக் நாடுகளின் குறிப்பிட்ட தேவைகளையும் முன்னுரிமைகளையும் நன்கு புரிந்துகொள்ள ஒரு முன்னோடி ஆய்வு மேற்கொள்ளப்படலாம்.

 

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகமான யுபிஐ-க்கும் (UPI) பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் பணம் செலுத்தும் முறைகளுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தவும் நான் முன்மொழிகிறேன். இத்தகைய ஒருங்கிணைப்பு வர்த்தகம், தொழில், சுற்றுலா ஆகியவற்றில் கணிசமான நன்மைகளைக் கொண்டுவரும். அனைத்து மட்டங்களிலும் பொருளாதார நடவடிக்கைகளையும் மேம்படுத்தும்.

மதிப்பிற்குரியவர்களே,

நமது கூட்டு முன்னேற்றத்திற்கு வர்த்தக, வணிக இணைப்பு முக்கியமானது.

நமது வர்த்தக சமூகங்களிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த, பிம்ஸ்டெக் வர்த்தக சபையை நிறுவ நான் முன்மொழிகிறேன். மேலும், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக வருடாந்திர பிம்ஸ்டெக் வர்த்தக உச்சி மாநாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

பிம்ஸ்டெக் மண்டலத்தில் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிவதற்கு ஒரு ஆய்வை நடத்த வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்கிறேன்.

மதிப்பிற்குரியவர்களே,

சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான, பாதுகாவலான இந்தியப் பெருங்கடலுக்கு நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம். இன்று முடிவடைந்த கடல்சார் போக்குவரத்து ஒப்பந்தம் வர்த்தக கப்பல், சரக்குப் போக்குவரத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்தியம் முழுவதும் வர்த்தகத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும்.

நிலையான கடல்சார் போக்குவரத்து மையத்தை நிறுவ இந்தியா முன்மொழிகிறது. இந்த மையம் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, கடல்சார் கொள்கையில் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இந்த மண்டலம் முழுவதும் கடல்சார் பாதுகாப்பில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்த இது ஒரு கிரியா ஊக்கியாக செயல்படும்.

 

மதிப்பிற்குரியவர்களே,

சமீபத்திய பூகம்பம் பிம்ஸ்டெக் பிராந்தியம் இயற்கைப் பேரழிவுகளால் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது என்பதை நினைவூட்டுகிறது.

நெருக்கடி காலங்களில் முதல் நாடாக இந்தியா எப்போதும் தனது நட்பு நாடுகளுக்கு உதவ முன் வருகிறது. மியான்மர் மக்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்க முடிந்ததை நாங்கள் பெரும்பேறாகக் கருதுகிறோம். இயற்கைப் பேரிடர்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும்கூட நமது தயார்நிலையும், விரைந்து செயல்படும் திறனும் எப்போதும் தளராமல் இருக்க வேண்டும்.

இந்தச் சூழலில், இந்தியாவில் பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை சிறப்பு மையம் ஒன்றை நிறுவுவதை நான் முன்மொழிகிறேன். பேரிடர் தயார்நிலை, நிவாரணம், மறுவாழ்வு முயற்சிகளில் ஒத்துழைப்புக்கு இந்த மையம் உதவும். கூடுதலாக, பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் நான்காவது கூட்டுப் பயிற்சி இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும்.

மதிப்பிற்குரியவர்களே,

நமது கூட்டு சமூக வளர்ச்சியின் முக்கிய தூணாக பொது சுகாதாரம் உள்ளது.

பிம்ஸ்டெக் நாடுகளிடையே புற்றுநோய் பராமரிப்பில் பயிற்சி, திறன் வளர்ப்புக்கான ஆதரவை இந்தியா வழங்கும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சுகாதாரத்திற்கான நமது முழுமையான அணுகுமுறைக்கு ஏற்ப, பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பரப்புவதை ஊக்குவிக்க சிறப்பு மையம் ஒன்றும் நிறுவப்படும்.

அதேபோல், நமது விவசாயிகள் பயனடையும் வகையில், அறிவுப் பகிர்வு, சிறந்த நடைமுறைகள் பகிர்வு, ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு, வேளாண் துறையில் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மற்றொரு சிறப்பு மையத்தை இந்தியாவில் நிறுவ நாங்கள் முன்மொழிகிறோம்.

மதிப்பிற்குரியவர்களே,

விண்வெளித் துறையில் இந்திய விஞ்ஞானிகள் அடைந்துள்ள முன்னேற்றம் உலகின் தென் பகுதி முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக உள்ளது. எங்களது நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் அனைத்து பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

இது தொடர்பாக, மனிதவளப் பயிற்சிக்கான நிலையத்தை நிறுவுதல், நானோ செயற்கைக்கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்துதல், பிம்ஸ்டெக் நாடுகளுக்கான தொலையுணர்வு தரவுகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை நான் முன்மொழிகிறேன்.

மதிப்பிற்குரியவர்களே,

பிராந்தியம் முழுவதும் இளைஞர்களின் திறனை மேம்படுத்த, நாங்கள் போதிய முன்முயற்சியை தொடங்குகிறோம். அதாவது "மனித வள உள்கட்டமைப்பின் ஒழுங்கமைக்கப்பட்ட மேம்பாட்டிற்கான பிம்ஸ்டெக்" முன்முயற்சியைத் தொடங்குகிறோம்.

இந்தத் திட்டத்தின் கீழ், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 300 இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள்.

இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிம்ஸ்டெக் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும் நாளந்தா பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை திட்டமும் விரிவுபடுத்தப்படும். இதுதவிர பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் இளம் தூதரக அதிகாரிகளுக்கான வருடாந்திரப் பயிற்சித் திட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பிற்குரியவர்களே,

நமது பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியம் நமது நீடித்த உறவுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது.

ஒடிசாவின் 'பாலி ஜாத்ரா', பௌத்த - இந்து மரபுகளுக்கு இடையிலான ஆழமான வேரூன்றிய வரலாற்று இணைப்புகளையும் நம்மிடையே உள்ள மொழியியல் ஒற்றுமைகளையும் எடுத்துரைக்கிறது. இவை நமது கலாச்சார பரஸ்பர இணைப்பின் சக்திவாய்ந்த அடையாளங்களாக நிற்கின்றன.

இந்த உறவுகளைக் கொண்டாடவும், வெளிப்படுத்தவும், இந்த ஆண்டு இறுதியில் பிம்ஸ்டெக் பாரம்பரிய இசை விழாவை இந்தியா நடத்த உள்ளது.

மதிப்பிற்குரியவர்களே,

நமது இளைஞர்களிடையே அதிக அளவில் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், பிம்ஸ்டெக் இளம் தலைவர்களின் உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. பிம்ஸ்டெக் ஹேக்கத்தான், இளம் தொழில்முறை பார்வையாளர்கள் திட்டம் ஆகியவற்றை புதிய கண்டுபிடிப்புகளையும், ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதற்காக நாங்கள் தொடங்க உள்ளோம்.

விளையாட்டுத் துறையில், இந்த ஆண்டு பிம்ஸ்டெக் தடகளப் போட்டியை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. 2027-ம் ஆண்டை இலக்காகக் கொண்ட வகையில், பிம்ஸ்டெக் அமைப்பின் 30-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தொடக்க பிம்ஸ்டெக் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

மதிப்பிற்குரியவர்களே,

எங்களைப் பொறுத்தவரை பிம்ஸ்டெக் என்பது வெறுமனே ஒரு பிராந்திய அமைப்பு மட்டுமல்ல. இது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கூட்டு பாதுகாப்பு ஆகியவற்றுக்கான முன்மாதிரியாகும். இது நமது பகிரப்பட்ட உறுதிப்பாடுகள், நமது ஒற்றுமையின் வலிமை ஆகியவற்றுக்கு ஒரு சான்றாக நிற்கிறது.

 

"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்ற உணர்வை இது உள்ளடக்கியுள்ளது.

ஒற்றுமை, ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றுடன் நாம் ஒன்றாக இணைந்து தொடர்ந்து வலுப்படுத்தி, பிம்ஸ்டெக் அமைப்பை மேலும் உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று நான் நம்புகிறேன்.

நிறைவாக, பிம்ஸ்டெக் அமைப்பின் புதிய தலைவராக பங்களாதேஷை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதன் வெற்றிகரமான தலைமைக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு : இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

******

 

(Release ID: 2118663)

TS/PLM/SG

 

 

 

 

 

 


(Release ID: 2118875) Visitor Counter : 11