மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகா கும்பமேளா 2025 இன் உணர்வைக் கொண்டாடும் அகில இந்திய  ஓவியப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

Posted On: 31 MAR 2025 2:44PM by PIB Chennai

 

நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் புனிதமான சங்கமமான மகா கும்பமேளா, இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி, உலகின் மிகப்பெரிய அமைதியான ஒன்றுகூடலாகத் திகழ்ந்தது. இந்த உன்னதமான நிகழ்வு 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடந்தது. இது ஆன்மீக அறிவொளிக்கான நிரந்தர மனிதத் தேடலாக அமைந்தது. ஆழ்ந்த தத்துவத்தைக் குறிப்பிட்டு காட்டுவதற்கும் துடிப்பான கலாச்சார வெளிப்பாடுகளுக்கும் பெயர் பெற்ற இந்தத் திருவிழாவானது பக்தி, அறிவு மற்றும் ஒற்றுமையின் கூட்டு கொண்டாட்டத்திற்காக கோடிக்கணக்கானவர்களை ஈர்த்து ஒன்றிணைத்தது.

இந்தப் புனிதமான பாரம்பரியத்தின் சாரத்தை கலை ரீதியாக ஆராயும் வகையில் இளம் மனதை ஊக்குவிப்பதற்காக, கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மகா கும்பமேளா 2025 என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் அகில இந்திய ஓவியம்  வரைதல் மற்றும் வர்ணமிடுதல் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய இணைப்புப் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தப் போட்டி நடத்தப்பட்டது. பவ்ய மஹா கும்பமேளா, திவ்ய மஹா கும்பமேளா மற்றும் ஒரே பாரதம் உன்னத பாரதம் ஆகிய மூன்று கருப்பொருள்களின் கீழ் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும், இந்தியாவின் வளமான கலாச்சார மரபுகள் மற்றும் மதிப்புகளையும் புரிந்துகொள்ள மாணவர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும், இதனால் வேற்றுமையில் ஒற்றுமையின் உணர்வைப் பாராட்டவும் கொண்டாடவும் மாணவர்களால் முடியும். இந்தப் போட்டிக்கான முடிவுகள்  மார்ச்  24 அன்று அறிவிக்கப்பட்டன.

1040 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 39,840 மாணவர்களும், 404 நவோதயா வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 26,398 மாணவர்களும், 1,000 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 2,887 மாணவர்களும் போட்டியில் பங்கேற்றனர்.

ஓவியம்  வரைதல் மற்றும் வர்ணம் தீட்டுதல் ஆகிய இரு பிரிவுகளிலும் வெற்றியாளர்கள் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் சான்றிதழ்கள் மற்றும் பரிசு தொகுப்புகள் உட்பட பத்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

ஓவியம் வரைதல் போட்டியில் லாவண்யா தாகுர்(மேற்கு வங்கம்), மைரா கோத்வாஜ்(உத்திரப் பிரதேசம்), அனுஷ்கா தாஸ் (மேற்கு வங்கம்) ஆகிய மாணவர்கள் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றுள்ளார்கள். வர்ணம் தீட்டுதல் போட்டியில் விவேக் சர்மா(ராஜஸ்தான்), லக்ஷ்ராஜ் ஜோர்வாஜ்(ராஜஸ்தான்), அவ்னேஷ் பந்த்(உத்திரப் பிரதேசம்) ஆகிய மாணவர்கள் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றுள்ளார்கள்.

மகா கும்பமேளா 2025 குறித்த அகில இந்திய ஓவியம் வரைதல்  மற்றும் வர்ணம் தீட்டுதல் போட்டியானது இந்தக்  காலத்தைத் தாண்டிய  பாரம்பரியத்தின் விளக்கங்களை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த இளம் மனங்களுக்கு ஒரு தளமாக செயல்பட்டுள்ளது.   தேசியக் கல்விக் கொள்கை 2020 –ன்படி, கலாச்சார விழிப்புணர்வு மற்றும் கலை வெளிப்பாடு ஆகியவை முழுமையான கற்றலுக்கு ஒருங்கிணைந்தவை ஆகும்.  மேலும் இந்த வளர்ந்து வரும் கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றல் மூலம் இதை எடுத்துக்காட்டியுள்ளனர்..

***

TS/PKV/KV

 


(Release ID: 2117037) Visitor Counter : 26