இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டி 2025: 10 பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்திய பளுதூக்கும் வீரர்கள்
Posted On:
28 MAR 2025 1:37PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற இரண்டாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில், காந்திநகர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய சிறப்பு மையத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜவஹர்லால் நேரு விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஏழு தங்கம் உட்பட 10 பதக்கங்களை அவர்கள் வென்றனர்.
ஜந்து குமார் (ஆடவர் 72 கிலோ), ஜஸ்பிரீத் கவுர் (பெண்கள் 45 கிலோ), சீமா ராணி (பெண்கள் 61 கிலோ), மணீஷ் குமார் (ஆடவர் 54 கிலோ) ஆகியோர் தேசிய சாதனைகளை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றனர். மேலும் ஒரு வாரத்திற்கு முன் நொய்டாவில் நடைபெற்ற போட்டியில் நிகழ்த்தியிருந்த தங்கள் சொந்த தேசிய சாதனைகளை ஜந்து, ஜஸ்பிரீத், மணீஷ் ஆகிய மூவரும் முறியடித்தனர்.
இது குறித்து பேட்டியளித்த காந்திநகர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய சிறப்பு மையத்தை சேர்ந்த பளுதூக்கும் பிரிவு தலைமை பயிற்சியாளர் ராஜீந்தர் சிங் ரஹேலு, தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கள் அணி 8 தங்கம் உட்பட 12 பதக்கங்களை வென்றதுடன் 3 தேசிய சாதனைகளை படைத்ததாக கூறினார். இந்த முறை 7 தங்கம், 3 வெள்ளி என 10 பதக்கங்களை வென்றதுடன், 4 தேசிய சாதனைகளையும் படைத்தும், ஒரு வாரத்தில் 7 தேசிய சாதனைகளை முறியடித்தும் உள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தங்கள் அணி முழு அர்ப்பணிப்புடன் தயாராகி வருவதாகவும், எதிர்கால பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்கள், இந்த மையத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116099
***
SMB/GK/RJ/KR
(Release ID: 2116118)
Visitor Counter : 45