நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக நுகர்வோர் உரிமைகள் தினம்


அரசின் பல்வேறு முன்முயற்சிகள் நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கின்றன: மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி

Posted On: 15 MAR 2025 3:21PM by PIB Chennai

 

நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை, உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு "நிலையான வாழ்க்கை முறைக்கு ஒரு நியாயமான மாற்றம்" என்ற கருப்பொருளில் ஒரு இணையவழிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இன்று (15.03.2025) நடைபெற்ற இந்த இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றினார்.

மின் வணிகத் துறையில் (இ-காமர்ஸ்) நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுத்தல், நுகர்வோர் தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற அரசின் பல்வேறு நடவடிக்கைகள் நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதாக அவர் கூறினார். பொறுப்பான நுகர்வோர் கொள்கைகள் மூலம் நிலைத்தன்மையை அதிகரிப்பதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.  மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பில் மட்டுமல்லாமல், நுகர்வோர் வளத்திலும் கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் எடுத்துரைத்தார். அன்றாட நுகர்வோர் தேர்வுகளில் நிலைத்தன்மையை ஒருங்கிணைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உரையாடலை வளர்ப்பதையும் இந்த இணையவழிக் கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு கருப்பொருள் நிலையான, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான தேர்வுகளை அனைத்து நுகர்வோருக்கும் கிடைக்கக்கூடியதாகவும், மலிவானதாகவும் மாற்ற வேண்டியதன் அவசியத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். அதே நேரத்தில் இந்த மாற்றம் மக்களின் அடிப்படை உரிமைகளையும் தேவைகளையும் நிலைநிறுத்துவதை உறுதி செய்கிறது என்றும் திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார். பருவநிலை மாற்றம், மாசுபாடு போன்ற நெருக்கடிகளுக்குத் தீர்வு காண, நிலையான வாழ்க்கை முறை முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு, நீடித்த தன்மையை ஊக்குவித்தல் ஆகியவை பழங்காலங்களிலிருந்தே இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருவதாகவும், இது தற்போதைய மத்திய அரசின் நிர்வாகத்தின் மையமாக அமைந்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

நுகர்வோர் பாதுகாப்பை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இ-டாகில் (E-Daakhil) இணையதளமும், பின்னர் இ-ஜாக்ரிதியும் (e-Jagriti) அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை அங்கீகரித்தல், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் போன்ற இந்திய தர நிர்ணய அதைவனதான பிஐஎஸ்-ஸின் (BIS) முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். 769 தயாரிப்புகளை உள்ளடக்கிய 180 தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை வழங்கியதற்காக பிஐஎஸ்-ஐ அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா தமது உரையில், நுகர்வோர் உரிமைகளைக் கொண்டாடுவதற்கும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச அளவில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். பரந்த மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, அதன் கொள்கைகள், ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் மூலம் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அவர் தெரிவித்தார்.

நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி நிதி காரே தமது வரவேற்புரையில் நிலைத்தன்மை என்பது அதிக செலவு பிடிப்பதாக இருக்கக் கூடாது எனவும் மாறாக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடையக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். எனவே, நிலையான வாழ்க்கை முறைக்கு நியாயமான மாற்றம் தேவை என்று கூறிய அவர், உயர்தர பொருட்களின் உற்பத்தியாளர்கள் நுகர்வோருக்கு நிலையான தயாரிப்புகளை உருவாக்குவதில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

துறையின் மூத்த அதிகாரிகள், நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையங்களின் பிரதிநிதிகள்,  பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள், தொழில்துறையினர், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பல்வேறு தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், நுகர்வோர் சட்டம் தொடர்பான வல்லுநர்கள், மின் வணிக (இ-காமர்ஸ்) நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த இணையவழிக் கருத்தரங்கில் (வெபினார்) கலந்து கொண்டனர்.

***

PLM/KV

 


(Release ID: 2111489) Visitor Counter : 25