இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விளையாட்டுகளில் வயது மோசடிக்கு எதிரான வரைவு தேசிய சட்டம் 2025 குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கருத்துகளை வரவேற்கிறது
Posted On:
13 MAR 2025 3:02PM by PIB Chennai
விளையாட்டுக்களில் தவறான வயதைப் பதிவு செய்து மோசடியில் ஈடுபடுவோருக்கு எதிரான வரைவு தேசிய சட்டம் 2025 குறித்து பொதுமக்கள் மற்றும் விளையாட்டு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கருத்துகள் / பரிந்துரைகளை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வரவேற்கிறது. விளையாட்டில் வயது மோசடிக்கு எதிரான வரைவு தேசிய சட்டம் 2025 பொது தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது வயது மோசடியை தடுப்பதற்கு வகை செய்கிறது. உண்மையான விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதையும், நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய விளையாட்டுகளில் நியாயமான போட்டி, நெறிமுறை ஆளுகை மற்றும் மேம்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க புதுப்பித்தலைக் குறிக்கும் வகையில் இந்தத் திருத்தம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரைவுச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. கட்டாய வயது சரிபார்ப்பு & டிஜிட்டல் லாக்கிங்: அனைத்து விளையாட்டு வீரர்களும் பதிவு செயல்பாட்டின் போது மூன்று கட்டாய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்த்தவுடன், விளையாட்டு வீரரின் வயது ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தரவுத்தளத்தில் பாதுகாப்பாகப் பதிவு செய்யப்படும். எதிர்காலத்தில் தவறாகக் கையாளுவதைத் தடுக்கும் வகையில் அவர்களின் சரிபார்க்கப்பட்ட வயது நிரந்தரமாக லாக்கிங் செய்யப்படும்.
2. வயது முரண்பாடுகளுக்கான மருத்துவ பரிசோதனை: வயது முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு, மருத்துவ பரிசோதனைகள் டி.டபிள்யூ 3(TW3) முறை, எம் ஆர் ஐ ஸ்கேன் மற்றும் பொது உடல் மற்றும் பல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும், ஒரு தடகள வீரரின் வயதைத் துல்லியமாகத் தீர்மானிக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எலும்பு மதிப்பீடுகள் ஆரம்ப கட்டத்தில் செய்யப்படும். இந்த பரிசோதனைகளில் எழும் எந்தவொரு சர்ச்சைகளும் நியமிக்கப்பட்ட மேல்முறையீட்டு மருத்துவக் குழு மூலம் கூடுதல் மதிப்பாய்வுக்காக மேல்முறையீடு செய்யப்படலாம்.
3. மீறல்களுக்கு ஒரே வகையான தண்டனைகள்: வயது மோசடி மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். முதல் விதிமீறலில் குற்றவாளி என்று கண்டறியப்படும் விளையாட்டு வீரர்கள் அனைத்து போட்டிகளிலிருந்தும் இரண்டு ஆண்டு தடையை எதிர்கொள்வார்கள். அத்துடன் வென்ற எந்தவொரு பட்டங்களையும் அல்லது பதக்கங்களையும் இழக்க நேரிடும். இரண்டாவது முறை மீறலுக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் வாழ்நாள் தடை மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு வழிவகுக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளும் இடைநீக்கம் மற்றும் அவர்களின் பொறுப்புகளில் இருந்தும் தடை செய்யப்படுவார்கள்.
4. முறைகேடுகளை அம்பலப்படுத்தும் பொறிமுறை: வயது மோசடி வழக்குகளை அநாமதேயமாக புகார் அளிப்பவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ரகசிய தளம் உருவாக்கப்படும்.
5. சுய வெளிப்படுத்தலுக்கான பொது மன்னிப்பு திட்டம்: ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பொது மன்னிப்பு சாளரம் வழங்கப்படும். இது விளையாட்டு வீரர்கள் அபராதம் இல்லாமல் தங்கள் சரியான வயதை தானாக முன்வந்து அறிவிக்க அனுமதிக்கிறது. இந்தப் பொது மன்னிப்பு திட்டத்தில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் செயல்திறன் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். பின்னர் பொருத்தமான வயதுப் பிரிவில் மீண்டும் சேர்க்கப்படுவார்கள்.
6. இரண்டு அடுக்கு மேல்முறையீட்டு முறை: வயது நிர்ணயம் தொடர்பான சர்ச்சைகளை இரண்டு அடுக்கு மேல்முறையீட்டு வழிமுறை கையாளும். ஆரம்ப மருத்துவ பரிசோதனை முடிவுகளில் அதிருப்தி அடைந்த விளையாட்டு வீரர்கள் முதலில் பிராந்திய மேல்முறையீட்டு குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம். அதிலும் திருப்தி அடையவில்லை என்றால், விளையாட்டு வீரர்கள் மத்திய மேல்முறையீட்டுக் குழுவை (சிஏசி) அணுகலாம். சிஏசியின் முடிவே இறுதியானது மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்தும்.
7. ஒருமைப்பாடு / இணக்க அதிகாரிகளின் பங்கு: ஒவ்வொரு போட்டிக்கும் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் ஒருமைப்பாடு / இணக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். மேலும் குறியீட்டின் விதிகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கு அவர்கள் பொறுப்பாவார்கள். அவர்களின் முதன்மை கடமைகளில் வயது தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்தல், இணக்க செயல்முறையை மேற்பார்வை செய்தல், வயது மோசடியைக் கண்டறிந்து தடுத்தல் மற்றும் ஏதேனும் மீறல்கள் இருந்தால் உடனடியாகப் புகாரளித்தல் ஆகியவை அடங்கும்.
8. அர்ப்பணிக்கப்பட்ட தேசிய தரவுத்தளம்: விளையாட்டு வீரர்களின் அனைத்து வயது சரிபார்ப்பு தரவுகளையும் பாதுகாப்பாகச் சேமிக்க தேசிய விளையாட்டு களஞ்சிய அமைப்புடன் (என்.எஸ்.ஆர்.எஸ்) இணைக்கப்பட்ட ஒரு பிரத்யேக, மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் போர்ட்டல் நிறுவப்படும்.
9. கியூஆர் பதிக்கப்பட்ட அடையாள அட்டைகள்: வெற்றிகரமான சரிபார்ப்பைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள் கியூஆர் குறியீடுகள் பதிக்கப்பட்ட அடையாள அட்டைகளைப் பெறுவார்கள். இந்த அடையாள அட்டைகள் டிஜிலாக்கர் தளத்தின் மூலம் டிஜிட்டல் முறையில் அணுகப்படும்,ன. மேலும் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் போது கட்டாயமாக இதனை பரிசோதனைக்கு காட்டவேண்டும்.
10. பொது பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத்தன்மை: இந்த விதித்தொகுப்பை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வலுவான கண்காணிப்பு கட்டமைப்பு நிறுவப்படும்.
பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகள் / கருத்துக்களை அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்னஞ்சல் மூலம் section.sp3-moyas[at]gov[dot]in என்ற முகவரிக்கு 31.03.2025 க்குள் கருத்துக்களை அனுப்ப வேண்டும். வரைவு சட்ட மசோதாவை https://yas.gov.in/sports/draft-national-code-against-age-fraud-sports-ncaafs-2025-inviting-comments-suggestions -ல் அணுகலாம்.
***
(Release ID: 2111175)
TS/PKV/RR/KR
(Release ID: 2111214)
Visitor Counter : 17