விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துவரம் பருப்பு உற்பத்தி ஆகும் முக்கிய மாநிலங்களில் கொள்முதல் அதிகரிப்பு

குறைந்தபட்ச ஆதரவு விலையில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூர் ஆகியவற்றின் 100% உற்பத்தியையும் கொள்முதல் செய்ய அரசு உறுதி

Posted On: 13 MAR 2025 10:59AM by PIB Chennai

ஒருங்கிணைந்த பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு திட்டத்தை 2025-26 வரை தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்தத் திட்டமானது கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிக செயல்திறனைக் கொண்டுவருவதற்காக நிர்வகிக்கப்படுகிறது.  இது விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க உதவுவது மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு மலிவு விலையில் அவை கிடைப்பதையும் உறுதி செய்கிறது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையின் நிலையற்ற தன்மையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஒருங்கிணைந்த பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு இயக்கத்தின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், அறிவிக்கை செய்யப்பட்ட பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கொப்பரை ஆகியவற்றை நிர்ணயிக்கப்பட்ட நியாயமான சராசரி தரத்திற்கு இணங்க மத்திய நோடல் ஏஜென்சிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் முன் பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து மாநில அளவிலான முகமைகள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்கின்றன.

உள்நாட்டு பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதில் பங்களிக்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், 2024-25 கொள்முதல் ஆண்டில், மாநிலத்தின் உற்பத்தியில் 100 சதவீதத்தையும் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூர் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் பருப்பு வகைகளில் தன்னிறைவை அடைவதற்காக, 2028-29 வரை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மாநிலத்தின் உற்பத்தியில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூர் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்வது 100% வரை மேற்கொள்ளப்படும் என்று 2025 பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான்,  துவரம் பருப்பு, மசூர் பருப்பு, உளுந்து பயிர்களை முறையே 13.22 லட்சம் மெட்ரிக் டன், 9.40 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் 1.35 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2024-25 காரீப் பருவத்திற்கான விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 13.22 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய அவர் ஒப்புதல் அளித்தார்.

ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏற்கனவே கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது‌  மேலும் இந்த மாநிலங்களில் 11.03.2025 வரை மொத்தம் 1.31 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த 89,219 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். பிற மாநிலங்களிலும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யும் பணி மிக விரைவில் தொடங்கப்படும். தேசிய வேளாண் கூட்டுறவு இணையத்தின் இ-சம்ரிதி இணையதளம் மற்றும் தேசிய கூட்டுறவு நிதியத்தின் சம்யுக்தி தளம் மூலமாக முன் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்தும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது. தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நிதியம் ஆகிய மத்திய ஒருங்கிணைப்பு முகமைகள் மூலமாக விவசாயிகளிடமிருந்து 100% துவரம் பருப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

***

(Release ID: 2111094)
TS/PKV/RR/KR


(Release ID: 2111134) Visitor Counter : 32