மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நம்பகமான நண்பராகவும், முக்கிய கூட்டாளியாகவும் மடகாஸ்கர் திகழ்கிறது: மக்களவைத் தலைவர்

Posted On: 12 MAR 2025 4:17PM by PIB Chennai

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று மடகாஸ்கரை ஒரு நேசத்துக்குரிய, நம்பகமான நண்பராகக் குறிப்பிட்டதோடு அதன் முன்னேற்றப் பயணத்தில் உறுதியான கூட்டாளியாக இந்தியாவை அது மிகவும் மதிக்கிறது என்றும் குறிப்பிட்டார். "சாகர்" (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, இந்தியப் பெருங்கடல் எல்லைக்குள் இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக மடகாஸ்கர் திகழ்கிறது என்று அவர் மேலும் கூறினார். இந்த விலைமதிப்பற்ற கூட்டாண்மை, பிராந்திய நிவலைத்தன்மையை வலுப்படுத்துவதிலும், பிராந்தியம் முழுவதும் பொருளாதார செழிப்பை வளர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மடகாஸ்கர் தேசிய நாடாளுமன்றத் தலைவர் மேன்மை தங்கிய ஜஸ்டின் டோக்லி தலைமையிலான மடகாஸ்கர் நாடாளுமன்றக் குழுவினருடன் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது திரு. பிர்லா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவுக்கும் மடகாஸ்கருக்கும் இடையிலான உறவு வரலாற்று ரீதியாக வலுவானது என்றும், இரு நாடுகளும் வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பரஸ்பர தொடர்பு ஆகியவற்றில் பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் திரு பிர்லா சுட்டிக் காட்டினார்.

'வசுதைவ குடும்பகம்' என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் இந்தியா, அண்டை நாடுகளுக்கு, குறிப்பாக பேரிடர் காலங்களில் உதவி வழங்குவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது என்று அவர் கூறினார். மடகாஸ்கருக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதில் இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு குறித்து திரு பிர்லா குறிப்பிட்டார். மடகாஸ்கரின் வளம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க இந்தியா பல்வேறு திட்டங்களுக்கு உதவியுள்ளது.இது பரஸ்பர நன்மை தரும் வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் மடகாஸ்கரில் உள்ள இந்திய வம்சாவளியினர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பு குறித்தும் திரு பிர்லா குறிப்பிட்டார்.

திங்கள்கிழமை இந்தியா வந்த மடகாஸ்கர் பிரதிநிதிகள் குழு இன்று மக்களவையின் நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். மக்களவையில் உறுப்பினர்களின் சார்பில் மக்களவை தலைவர் குழுவினரை வரவேற்றார்.

***

(Release ID: 2110808)
TS/IR/RR/KR

 


(Release ID: 2110905) Visitor Counter : 18