அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

"இந்தியாவின் அறிவியல் தலைமை இப்போது பெண்களால் வழிநடத்தப்படுகிறது": சர்வதேச மகளிர் தினத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 08 MAR 2025 8:29PM by PIB Chennai

சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்-என்.பி.எல்) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களில் உரையாற்றிய மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், "இந்தியாவின் ஆதித்யா-எல் 1 திட்டம் ஒரு பெண்ணால் வழிநடத்தப்படுகிறது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் அதன் ஆறு ஆய்வகங்கள் பெண்களால் வழிநடத்தப்படுகின்றன, மேலும் சந்திரயான் -3 திட்டத்தில் ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இது நமது அறிவியல் சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது", என்று கூறினார்.


இந்த நிகழ்வின் போது, "சி.எஸ்.ஐ.ஆர் சக்தி: அறிவியலில் பெண்களைக் கொண்டாடுதல்" என்ற தலைப்பில் ஒரு காணொளியை அமைச்சர் வெளியிட்டார், இது இந்தியாவின் ஆராய்ச்சி சூழலை வடிவமைப்பதில் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. சி.எஸ்.ஐ.ஆர் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக வணிகமயமாக்கிய பெண் தொழில்முனைவோரை அவர் பாராட்டினார். கூடுதலாக, சி.எஸ்.ஐ.ஆர் ஆதரவுடன் பெண் விஞ்ஞானிகளின் சாதனைகளை ஆவணப்படுத்தும் "சி.எஸ்.ஐ.ஆர் ஆஸ்பயர் பெண் விஞ்ஞானி விருது பெற்றவர்கள்" என்ற தலைப்பில் ஒரு தொகுப்பையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். சிறப்பு அங்கீகாரமாக, சந்திரயான்-3 அமைப்பின் இணை திட்ட இயக்குநர் திருமதி கல்பனா கலாஹஸ்திக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய அறிவியல் மற்றும் நிர்வாகத்தில் மாறிவரும் சூழலில் பெண்கள் பங்கேற்பதைத் தாண்டி முக்கிய தேசிய திட்டங்களை வழிநடத்தும் நிலைக்கு முன்னேறியுள்ளனர் என்று தெரிவித்தார்.  "பெண்களின் பங்கேற்பு என்ற நிலையில் இருந்து பெண்கள் தலைமையிலான செயல்முறைக்கு நாம் முன்னேறி உள்ளோம்," என்று குறிப்பிட்ட அவர், ஒரு காலத்தில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய அறிவியல் துறைகளில் இப்போது  பெண்கள் கோலோச்சுகிறார்கள் என்று கூறினார். 

குடியரசு தின அணிவகுப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது முதல் சைனிக் பள்ளிகள் மற்றும் பெண் கேடட்களுக்கான ராணுவ அகாடமிகள் போன்ற பாதுகாப்பு நிறுவனங்களைத் திறப்பது வரை, அறிவியலில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சிகளையும் டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். 

விண்வெளி ஆய்வில் பாலின உள்ளடக்கத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்திய டாக்டர் சிங், ககன்யான் திட்டத்திற்காக வரவிருக்கும் சோதனை விமானத்தில் 'வியோம்மித்ரா' என்ற பெண் மனித உருவ ரோபோ இடம்பெறும் என்பதை வெளிப்படுத்தினார். இது இந்தியாவின் விண்வெளி முயற்சிகளில் பெண்களின் வளர்ந்து வரும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கான அடையாளமாகும் என்று அவர் கூறினார்.
  
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: 
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2109524

   
******

RB/DL


(Release ID: 2109696) Visitor Counter : 10


Read this release in: English , Hindi , Marathi