சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"அரசியல் சாசன நிர்ணய சபையின் பெண் உறுப்பினர்களின் வாழ்க்கையும் அவர்களது பங்களிப்புகளும்" என்ற நூல் வெளியீடு

Posted On: 08 MAR 2025 1:20PM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சட்டம் - நீதித் துறை அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க வெளியீடாக "அரசியல் சாசன நிர்ணய சபையின் பெண் உறுப்பினர்களின் வாழ்க்கையும் அவர்களது பங்களிப்புகளும்" (The Life and Contributions of the Women Members of the Constituent Assembly) என்ற தலைப்பில் முதல் முறையாக நூல் வெளியிடப்படுகிறது. அறிவார்ந்த பணியான இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த பதினைந்து புகழ்பெற்ற பெண்களுக்கு ஒரு மரியாதையாக இந்த நூல் அமைந்துள்ளது. இதுவரை அவர்களின் பங்களிப்புகள் பெரிய அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.

வழக்கறிஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் உட்பட இந்த முன்னோடி பெண்களின் பங்களிப்புகளை இந்த நூல் உன்னிப்பாக ஆவணப்படுத்துகிறது. துன்பங்களை எதிர்கொண்ட போதிலும், இந்தப் பெண்கள், அரசியல் சாசன நிர்ணய சபையில் முக்கிய குரல்களாக உருவெடுத்தனர். அடிப்படை உரிமைகள், சமூக நீதி, பாலின சமத்துவம், ஜனநாயக ஆட்சி ஆகியவை குறித்த விவாதங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை அவர்கள் செலுத்தினர்.

இந்த நூல் வெளியீடு அவர்களின் உரைகள், விவாதங்கள், அரசியல் சாசன உருவாக்கத்தில் அவர்களது செயல்பாடுகள் போன்றவை பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது. 

புத்தகத்தின் முக்கிய அம்சங்கள்:

வரலாற்று சூழல்: சுதந்திரத்திற்கு முந்தைய பாரதத்தில் பொது வாழ்க்கையில் பெண்களின் அரசியல் பங்கேற்பும் சுதந்திரத்திற்குப் பிந்தைய பயணமும் பற்றிய ஆய்வு.

பதினைந்து புகழ்பெற்ற பெண்களின் விவரங்கள்: இந்த நூல் இந்தியாவின் அரசியலமைப்பு சபையில் இடம்பெற்ற பதினைந்து புகழ்பெற்ற பெண்களின் பங்களிப்புகளை வழங்குகிறது. அவர்களில், திருமதி அம்மு சுவாமிநாதன் அரசியலமைப்பு விதிகளில் பாலின சமத்துவத்திற்காக குரல் கொடுத்தார். பெண்களின் உரிமைகள் முறையாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்தார். வேற்றுமையில் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் கூட்டாட்சி குறித்த விவாதங்களில் திருமதி அன்னி மஸ்கரீன் முக்கிய பங்கு வகித்தார். இந்த சபையில் ஒரே முஸ்லிம் பெண்ணான பேகம் குட்சியா ஐஜாஸ் ரசூல், மதச்சார்பின்மைக்கான உறுதியான வழக்கறிஞராக செயல்பட்டார். அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அடையாளத்திற்காக அவர் வாதிட்டார். இந்த சபையில் இடம்பெற்ற தலித் பெண்ணான திருமதி தாக்ஷாயணி வேலாயுதன், தீண்டாமையை அச்சமின்றி எதிர்த்து, விளிம்புநிலை சமூகங்களின் உரிமைகளுக்காக போராடினார். திருமதி துர்காபாய் தேஷ்முக் சமூக நலக் கொள்கைகளை வடிவமைப்பதிலும், பெண் கல்வியை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

திருமதி ஹன்சா ஜீவராஜ் மேத்தா இந்தியாவின் அடிப்படை உரிமைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். முன்னோடி அரசியல்வாதியான ராஜ்குமாரி அம்ரித் கௌர், இந்தியாவின் பொது சுகாதாரக் கொள்கைகளின் சிற்பியாக இருந்தார். "இந்தியாவின் நைட்டிங்கேல்" என்று அழைக்கப்படும் திருமதி சரோஜினி நாயுடு, சிவில் உரிமைகளுக்கான ஒரு சிறந்த வழக்கறிஞராக இருந்தார். இது இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகளில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னாளில் இந்தியாவின் முதல் பெண் முதல்வரான திருமதி சுசேதா கிருபளானி, இந்த சபையில் ஒரு முக்கிய குரலாக இருந்து, தொழிலாளர் உரிமைகள், நிர்வாக சீர்திருத்தங்களை ஆதரித்தார். புகழ்பெற்ற ராஜதந்திரியான திருமதி விஜயலட்சுமி பண்டிட், சர்வதேச ஒத்துழைப்பு, உலகளாவிய நிர்வாகத்தில் இந்தியாவின் பங்கை வலுவாக ஆதரித்தார்.

அரசியல் சாசன நிர்ணய சபை விவாதங்கள்: இந்த பெண்களின் முக்கிய கருத்துகளின் தொகுப்பு, அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான இந்தியாவுக்கான அவர்களின் பார்வையை எடுத்துக் காட்டுகிறது.

தேசிய, உலகளாவிய நிர்வாகத்தில் பெண்களின் தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் குறித்து நடந்து வரும் சொற்பொழிவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த நூல் சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியல் சாசன வரலாற்றில் பெண்களின் பங்களிப்பைப் புரிந்துகொள்ள ஆர்வமுள்ள சட்ட அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், மாணவர்கள், மக்களுக்கு இது ஒரு அத்தியாவசிய ஆதாரமாக செயல்படும்.

 

*****

PLM /DL


(Release ID: 2109404) Visitor Counter : 31


Read this release in: Hindi , Malayalam , English , Urdu