ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்கள் மருந்தக தினம் 2025- ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள்

Posted On: 06 MAR 2025 6:13PM by PIB Chennai

மக்கள் மருந்தகத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜெனரிக் மருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7 ஆம் தேதி மக்கள் மருந்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மார்ச் 1 முதல் 7-ம் வரை நாடு முழுவதும் ஒரு வார கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் மக்கள் மருந்தகங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்காக மார்ச் 1-ம் தேதி ஒருவார கால கொண்டாட்டம் தொடங்கப்பட்டது.

ஜெனரிக் மருந்துகளின் நன்மைகளைப் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்துக் கற்பிப்பது இதன் முதன்மை குறிக்கோள்களில் ஒன்றாகும்.  விலை மலிவு என்ற காரணமாக தரத்தில் சமரசம் செய்யப்படமாட்டாது என்பது வலியுறுத்தப்படுகிறது. அதிக விலை சிறந்த தரத்தைக் குறிக்கின்றது என்ற தவறான கருத்தை அகற்றுவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்கள் மருந்தகம் தொடர்பான செயலி 2019 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. கூகுள் மேப் மூலம் அருகிலுள்ள மக்கள் மருந்தக மையத்தைக் கண்டறிவது, பிராண்டட் மருந்துகளின் விலைகளை ஒப்பிடுவது, ஒட்டுமொத்த சேமிப்பு போன்ற பல்வேறு அம்சங்களை இந்த செயலி கொண்டுள்ளது.

இங்கு விற்கப்படும் மருந்துகளின் விலைகள் வெளிச்சந்தையில் கிடைக்கும் பிராண்டட் மருந்துகளின் விலையை விட 50% முதல் 80% வரை குறைவாக உள்ளன.

மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் சிறந்த உற்பத்தி நடைமுறைகள் (WHO-GMP) தொடர்பாக சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

மக்கள் மருந்தக மையங்கள் தரமான மருந்துகளை பொது மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சுகாதாரப் பராமரிப்பு சென்றடைவதை இத்திட்டம் உறுதி செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தற்போது 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்கள் செயல்பட்டு வருவதால், இந்தத் திட்டம் சுகாதார வசதிகளை மேம்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மேலும் வளர்ச்சி பெற்று, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் அதன் பங்கை வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2108862

***

TS/PLM/AG/DL

 


(Release ID: 2108898) Visitor Counter : 38