கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாகித்ய அகாடமி "இலக்கிய விழா 2025"-யை ஏற்பாடு செய்கிறது

Posted On: 06 MAR 2025 12:20PM by PIB Chennai

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் முதன்மையான இலக்கிய நிறுவனமான சாகித்ய அகாடமி, அதன் வருடாந்திர இலக்கிய விழாவை புதுதில்லியில் உள்ள ரவீந்திர பவனில் நாளை (மார்ச் 7-ம் தேதி ) முதல் மார்ச் 12-ம் தேதி வரை   ஏற்பாடு செய்துள்ளது. மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

23 மொழிகளில் மதிப்புமிக்க சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படும்.  இந்த விருது வழங்கும் விழாவில், பிரபல ஆங்கில நாடக ஆசிரியர் திரு மகேஷ் தத்தானி தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மேலும் பிரபல எழுத்தாளரும் அறிஞருமான திரு உபமன்யு சாட்டர்ஜி இந்த ஆண்டு சம்வத்சர் சொற்பொழிவை நிகழ்த்துகிறார்.

ஆசியாவின் மிகப்பெரிய இலக்கிய விழாவான இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மொழிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 700 எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர். இவ்விழாவின் கருப்பொருள் இந்திய இலக்கிய மரபுகள் என்பதாகும். மேலும் விழாவின் கடைசி மூன்று நாட்களில் சிறந்த சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் தேசியக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விழாவில் இளம் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், பழங்குடியின எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்கள் பங்கேற்கின்றனர்.

விழாவின் இறுதி நாளன்று குழந்தைகளுக்கான 'ஸ்பின் எ டேல்' என்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா முழுவதும், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் ஆகியோர் பங்கேற்கும் பல்வேறு தலைப்புகளிலான விளக்கக்காட்சிகள், வாசிப்புகள், விவாதங்கள் நடைபெறும்.

மூன்று நாள் மாலை நேரங்களில், ராகேஷ் சௌராசியா (புல்லாங்குழல் இசை), நளினி ஜோஷி (இந்துஸ்தானி வாய்ப்பாட்டு) மற்றும் ஃபௌசியா தஸ்தங்கோ மற்றும் ரிதேஷ் யாதவ் (தஸ்தான்-இ-மகாபாரதம்) போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் இந்திய இலக்கியங்களை  விரும்புவோர் அனைவருக்கும் இந்த இலக்கிய திருவிழா சிறப்பான அனுபவமாக இருக்கும்.

***

(Release ID: 2108729)
TS/PKV/RR/KR


(Release ID: 2108767) Visitor Counter : 50