வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடிவமைப்பு நாட்டின் பாரம்பரியம் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 28 FEB 2025 11:52AM by PIB Chennai

வடிவமைப்பு என்பது அழகியல் சார்ந்ததாக மட்டுமல்லாமல் நாட்டின் பாரம்பரியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் புத்தாக்கமாகவும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் உள்ளது  என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நேற்று (2025 பிப்ரவரி 27-ம் தேதி)  நடைபெற்ற தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின்  44-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இளம் பட்டதாரிகள் நாட்டின் பாரம்பரியத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்', 'இந்தியாவில் வடிவமைப்போம்' என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இளம் பட்டதாரிகள் நிறைவேற்றுவார்கள் என்று அமைச்சர் கோயல் குறிப்பிட்டார். பட்டதாரி இளைஞர்கள்  பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பவர்களாகவும், புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும், வடிவமைப்பாளர்களாகவும் உலகின் நலனுக்காகப் பணியாற்றுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

விண்வெளி முதல் குறைமின்கடத்திகள் வரை பல்வேறு துறைகளில் வடிவமைப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை எடுத்துரைத்த திரு கோயல், சந்திரயான் விண்வெளி பயணத்தின் முதல் கட்டமான செயற்கைக்கோள் வடிவமைப்புதான் அதன் வெற்றிக்கு வழிவகுத்தது என்பதையும் சுட்டிக்காட்டினார். நாட்டின் வடிவமைப்பு திறன்கள், மின்னணு விளையாட்டு, பொம்மைகள் உருவாக்கம் போன்ற பல்வேறு துறைகளில் ஒலி-ஒளி தொழில்நுட்பங்களில் காட்சிப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

நாட்டின் 140 கோடி மக்களுக்கும் சேவையாற்றும் வகையில் புதிய யோசனைகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பெரிய அளவில் உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே, நாட்டின் விருப்பமும் வலிமையும் ஆகும் என்று அவர் தெரிவித்தார். இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உலக அளவில் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 430 மாணவர்களுக்கு தேசிய வடிவமைப்பு நிறுவனம் சார்பில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

----

(Release ID: 2106818)

TS/SV/KPG/KR


(Release ID: 2106876) Visitor Counter : 17