மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் மைக் மாசிமினோ பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா மாணவர்களுடன் கலந்துரையாடினார்
Posted On:
27 FEB 2025 4:22PM by PIB Chennai
நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் திரு மைக் மாசிமினோ புதுதில்லியில் இன்று பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஏஆர்-விஆர் ஆய்வகம், அடல் ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்ட பள்ளியின் ஆய்வக வசதிகளையும் திரு மாசிமினோ பார்வையிட்டார்.
மாணவர்களுடன் உரையாடிய திரு மாசிமினோ, இந்தியாவின் சந்திரயான் -3 பணியைப் பாராட்டினார். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகளாவிய விண்வெளி சமூகத்திற்கும் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்று வலியுறுத்தினார். சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் உள்ள சவால்கள் மற்றும் இந்த சாதனை வசிப்பிடத்திற்கு அவசியமான நீர் ஆதாரங்கள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளை எவ்வாறு வழங்க முடியும் என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்தார். கூடுதலாக, எதிர்கால விண்வெளித் திட்டங்களில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார்.
7 விண்வெளி வீரர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் தன்னை ஒரு விண்வெளி வீரராக மாற எவ்வாறு தூண்டியது என்பதை திரு மாசிமினோ மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளிப் பயணங்களின் போது தாங்கள் எடுத்துக் கொண்ட உணவு வகைகள் போன்றவற்றைப் பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். தனது தனிப்பட்ட அனுபவங்களை விவரித்த அவர், விண்வெளியில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்கு ஏற்ப எவ்வாறு தம்மை தயார்படுத்திக் கொண்டேன் என்பதை விவரித்தார். மேலும் அவர்களின் தூக்கம், பணிசெய்வதற்கான முறைகள் போன்றவற்றை விரிவாக விளக்கினார். விண்வெளி ஆய்வில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து மாணவர்கள் ஆர்வமாக கேள்விகள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், செயற்கை நுண்ணறிவானது செயல்முறைகளை நெறிப்படுத்தி, அவற்றை மிகவும் திறமையானதாகவும், செலவு குறைந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் என்று விளக்கினார். தனது கலந்துரையாடலை நிறைவு செய்த அவர், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் மற்றும் திறன்கள் குறித்து அறிவுரை வழங்கினார்.
ஒரு விண்வெளி வீரராக இருப்பதால் உள்ள சவால்கள் மற்றும் அவர்களின் தயாரிப்புக்கு அவசியமான முக்கிய பாடங்கள் குறித்து மாணவர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். மண் அறிவியல் மற்றும் கடல் உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை திரு மாசிமினோ வலியுறுத்தினார். நாசாவில் அவர் பணியாற்றிய மிகவும் சவாலான திட்டம் குறித்தும், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்க முடியுமா என்றும் மாணவர்கள் அவரிடம் கேட்டனர். சந்திரனில் வாழ்வது விரைவில் ஒரு யதார்த்தமாக மாறக்கூடும் என்றாலும், தொழில்நுட்ப சவால்கள் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குடியேற நீண்டகாலம் ஆகும் என்றும் அவர் விளக்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2106621
***
TS/IR/AG/KR/DL
(Release ID: 2106689)
Visitor Counter : 22