உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு சென்னை விமான நிலையத்தில் உடான் யாத்ரீ கஃபே – சிற்றுண்டிச் சாலையை திறந்து வைத்தார்

Posted On: 27 FEB 2025 2:04PM by PIB Chennai

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு சென்னை விமான நிலையத்தில் உடான் யாத்ரீகஃபே எனும் சிற்றுண்டிச் சாலையை இன்று (27.02.2025) திறந்து வைத்தார். அவருடன் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு டி ஆர் பி ராஜா, விமான நிலைய ஆணைய தலைவர் விபின் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, தாம் விமான போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் எடுக்கப்பட்ட பெரிய முன்னெடுப்பு ‘உடான் யாத்ரீ கஃபே’ என்ற இந்த குறைந்த விலை சிற்றுண்டிச் சாலை என்றார். இதன் மூலம் நாட்டிலேயே கொல்கத்தா விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக சென்னை விமான நிலையத்தில் இந்த சிற்றுண்டிச்சாலை திறக்கப்பட்டுள்ளது என்றும், பயணிகளின் தேவைகளை கேட்டறிந்து அதனடிப்படையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இங்கு, தண்ணீர் பாட்டில் ரூ.10, டீ ரூ.10, காஃபி ரூ.20, வடை ரூ.20, சமோசா ரூ.20, இனிப்பு வகை ரூ.20 என்ற விலையில் கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் விமான நிலையங்களில் பயணிகள் யாரும் பசியுடன் காத்திருக்கமாட்டார்கள் என்றும், பயணிகளின் நலனில் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக விமான போக்கு வரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி கண்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இது மேலும் வளர்ச்சியடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக உடான் திட்டம் நாட்டிலுள்ள பெரும்பாலான நடுத்தர மற்றும் சாமானிய மக்களையும் விமானத்தில் பயணிக்கச் செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். உடான் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின் கடந்த எட்டு ஆண்டுகளாக சுமார் 1.50 கோடி மக்கள் 600க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்களில் விமான சேவையைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

சென்னை விமான நிலைய இரண்டாவது முனையத்தின் முதல் கட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது என்றும் இதன் இரண்டாவது கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது என்றும் இது 3.5 கோடி பயணிகளை கையாளும் அளவுக்கு திறனுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முக்கியமானது என்றும், நாட்டின் கிழக்கு நுழைவாயிலாக சென்னை விமான நிலையம் செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு விமான நிலையத்தின் வளர்ச்சி அந்தப் பகுதியின் மொத்த வளர்ச்சியுடன் தொடர்புடையது என்றும், போக்குவரத்து இணைப்பு, தொழில் வளர்ச்சி, வர்த்தகம், சுற்றுலா போன்ற துறைகள் வளர்ச்சியடையும் என்றும் இதற்காக நாங்கள் தொடர்ந்து மாநில அரசுடன் கலந்தாலோசித்து விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை விமான
நிலையத்தில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அமைச்சர், உடான் திட்டத்தில் தமிழ்நாட்டின் மேலும் சில ஊர்களிலும் விமான நிலையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106580

***

AD/SMB/KR


(Release ID: 2106605) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi , Bengali