பிரதமர் அலுவலகம்
98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
நமது மொழி, நமது கலாச்சாரத்தைத் தாங்குகிறது: பிரதமர்
மராத்தி ஒரு முழுமையான மொழி: பிரதமர்
மகாராஷ்டிராவின் பல துறவிகள் மராத்தி மொழியில் பக்தி இயக்கத்தின் மூலம் சமூகத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டினர்: பிரதமர்
இந்திய மொழிகளிடையே ஒருபோதும் பகை இருந்ததில்லை, மாறாக அவை எப்போதும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு வளப்படுத்தியுள்ளன: பிரதமர்
Posted On:
21 FEB 2025 7:28PM by PIB Chennai
புதுதில்லி விஞ்ஞான் பவனில் 98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மராத்தி மொழியின் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு அனைத்து மராத்தியர்களையும் வரவேற்றார். அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாடு ஒரு மொழி அல்லது பிராந்தியத்துடன் நின்றுவிடவில்லை என்று கூறிய அவர், இந்த மாநாடு சுதந்திரப் போராட்டத்தின் சாரத்தையும், மகாராஷ்டிரா மற்றும் தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் உள்ளடக்கியது என்று கூறினார்.
1878-இல் அதன் முதல் பதிப்பு நடைபெற்றதிலிருந்து ]தற்போது வரை அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாடு இந்தியாவின் 147 ஆண்டுகால பயணத்திற்கு சாட்சியாக திகழ்கிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, திரு மகாதேவ் கோவிந்த் ரானடே, திரு ஹரி நாராயண் ஆப்தே, திரு மாதவ் ஸ்ரீஹரி அனே, திரு ஷிவ்ராம் பரஞ்ச்பே, திரு வீர் சாவர்க்கர் போன்ற பல சான்றோர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியுள்ளனர். இந்த பெருமைமிக்க பாரம்பரியத்தின் ஒருஅங்கமாக செயல்படுவதற்கு திரு சரத் பவார் அழைத்ததற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இந்த நிகழ்வுக்காக நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மராத்தி ஆர்வலர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இன்று சர்வதேச தாய்மொழி தினம் என்பதை கோடிட்டுக் காட்டிய பிரதமர், மராத்தி மொழி பற்றி நினைக்கும் போதெல்லாம் துறவி தியானேஸ்வரின் வரிகள் நினைவுக்கு வருவது மிகவும் இயல்பானது என்று குறிப்பிட்டார். துறவி தியானேஸ்வரின் வரிகளைவாசித்த திரு. மோடி, மராத்தி மொழி அமிர்தத்தை விட இனிமையானது என்றும், எனவே மராத்தி மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது தனக்கு அளவற்ற அன்பும் பாசமும் உள்ளது என்றும் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மராத்தி மொழி அறிஞர்களைப் போல தான் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், மராத்தி மொழியைக் கற்றுக்கொள்வதில் தான் எப்போதும் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக பிரதமர் கூறினார்.
மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு, புண்யாஷ்லோக் அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கரின் முயற்சிகளால் உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்பின் 75-வது ஆண்டு விழா ஆகியவற்றை நாடு கொண்டாடி வரும் முக்கியமான நேரத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். கடந்த நூற்றாண்டில், புகழ்பெற்ற மராத்தி நபர் ஒருவர் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் விதையை மகாராஷ்டிர மண்ணில் விதைத்தார் என்பது குறித்து பெருமிதம் தெரிவித்த திரு மோடி, இன்று அது ஒரு பெரிய விருட்சமாக வளர்ந்து, அதன் நூற்றாண்டைக் கொண்டாடுகிறது என்றார். கடந்த 100 ஆண்டுகளாக, இந்தியாவின் சிறந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை, வேதங்கள் முதல் விவேகானந்தர் வரை, புதிய தலைமுறையினருக்கு அதன் கலாச்சார முயற்சிகள் மூலம் ஆர்.எஸ்.எஸ் முன்னெடுத்துச் சென்றுள்ளது என்று அவர் தெரிவித்தார். நாட்டிற்காக வாழ ஆர்.எஸ்.எஸ் ஆல் உத்வேகம் பெற்றது, லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தனக்கும் கிடைத்த பாக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ் மூலமாகத்தான் மராத்தி மொழி மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்பு கொள்ள தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதையும் பிரதமர் ஒப்புக் கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு, மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதாகவும், இதற்காக இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 12 கோடிக்கும் அதிகமான மராத்தி பேசுபவர்கள் இந்த அங்கீகாரத்திற்காக பல தசாப்தங்களாக காத்திருந்ததாகவும் அவர் எடுத்துரைத்தார். இந்தப் பணியை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்ததை தனது வாழ்க்கையின் பெரும் அதிர்ஷ்டமாக அவர் கருதினார்.
"மொழி என்பது வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, அது நமது பண்பாட்டைத் தாங்கும் கருவி" என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். மொழிகள் சமூகத்தில் பிறந்தாலும், அதை வடிவமைப்பதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். மகாராஷ்டிரா மற்றும் நாட்டில் உள்ள பல தனிநபர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி மராத்தி நமது கலாச்சார வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது என்று அவர் கூறினார். மராத்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து சமர்த் ராம்தாஸ் கூறிய வார்த்தைகளை மேற்கோள் காட்டிய பிரதமர், "மராத்தி ஒரு முழுமையான மொழி; வீரம், அழகு, உணர்திறன், சமத்துவம், நல்லிணக்கம், ஆன்மீகம் மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது" என்று குறிப்பிட்டார். மராத்தி மொழியில் பக்தி, வலிமை மற்றும் அறிவு ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு ஆன்மீக சக்தி தேவைப்பட்டபோது, மகாராஷ்டிராவின் சிறந்த துறவிகள், முனிவர்களின் ஞானத்தை மராத்தி மொழியில் கிடைக்கச் செய்தனர் என்று திரு மோடி தெரிவித்தார். மராத்தியில் பக்தி இயக்கத்தின் மூலம் சமூகத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டிய துறவி தியானேஸ்வர், துறவி துக்காராம், துறவி ராம்தாஸ், துறவி நாம்தேவ், துறவி துக்டோஜி மகராஜ், கட்கே பாபா, கோரா கும்பார் மற்றும் பஹினாபாய் ஆகியோரின் பங்களிப்புகளை அவர் பாராட்டினார். நவீன காலத்தில், திரு. கஜானன் திகம்பர் மட்குல்கர் மற்றும் திரு. சுதிர் பட்கேயின் கீத ராமாயணம் ஆகியவற்றின் தாக்கத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.
பல நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறை நிலவியபோது, மராத்தி மொழி, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுதலை பெறும் பிரகடனமாக மாறியதை சுட்டிக்காட்டிய பிரதமர், எதிரிகளை கடுமையாக எதிர்த்த பேரரசர் சத்ரபதி சிவாஜி, மன்னர் சாம்பாஜி, பாஜிராவ் பேஷ்வா போன்ற மராட்டிய வீரர்களின் வீரத்தைக் குறிப்பிட்டார். சுதந்திரப் போராட்டத்தில், வாசுதேவ் பல்வந்த் பட்கே, லோகமான்ய திலகர் மற்றும் வீர சாவர்க்கர் போன்ற போராளிகள் ஆங்கிலேயரை சீர்குலைத்ததாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் பங்களிப்புகளில் மராத்தி மொழி மற்றும் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க பங்கை அவர் வலியுறுத்தினார். கேசரி, மராத்தா போன்ற செய்தித்தாள்கள், கவிஞர் கோவிந்தராஜின் சக்திவாய்ந்த கவிதைகள், ராம் கணேஷ் கட்கரியின் நாடகங்கள் ஆகியவை தேசிய உணர்வை வளர்த்ததாக திரு மோடி குறிப்பிட்டார். லோகமான்ய திலகர் மராத்தி மொழியில் எழுதிய கீத ரகசியம், நாடு முழுவதும் புதிய சக்தியை அளித்தது என்று அவர் கூறினார்.
"மராத்தி மொழியும் இலக்கியமும் ஒடுக்கப்பட்ட மற்றும் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு சமூக விடுதலைக்கான கதவுகளைத் திறந்துள்ளன" என்று திரு மோடி குறிப்பிட்டார். மராத்தியில் புதிய யுக சிந்தனையை வளர்த்த ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே, மகரிஷி கார்வே, பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்புகளை அவர் குறிப்பிட்டார். மராத்தி மொழி நாட்டிற்கு வளமான தலித் இலக்கியத்தை அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அதன் நவீன சிந்தனை காரணமாக, மராத்தி இலக்கியம் அறிவியல் புனைகதைகளையும் உருவாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். கடந்த காலத்தில் ஆயுர்வேதம், அறிவியல் மற்றும் தர்க்கவியல் ஆகியவற்றில் மகாராஷ்டிரா மக்களின் போற்றத்தக்க பங்களிப்புகளை சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்தக் கலாச்சாரம் எப்போதும் புதிய யோசனைகளையும் திறமைகளையும் வரவழைத்து, மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என்று கூறினார். மகாராஷ்டிரா மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார தலைநகராக மும்பை உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மும்பையைப் பற்றிப் பேசும்போது, திரைப்படங்களைக் குறிப்பிடாமல் இலக்கியம் பற்றிய விவாதத்தை நிறைவு செய்ய முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டார். மகாராஷ்டிரா மற்றும் மும்பை தான் மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களை உயர்த்தியுள்ளன என்று அவர் எடுத்துரைத்தார். சிவாஜி சாவந்தின் மராத்தி நாவல் மூலம் மாமன்னர் சம்பாஜியின் வீரத்தை அறிமுகப்படுத்திய சமீபத்தில் வெளியாகியுள்ள 'சாவா' திரைப்படத்தையும் அவர் குறிப்பிட்டார்.
கவிஞர் கேசவ்சுத் கூறியதை மேற்கோள் காட்டிய திரு மோடி, பழைய எண்ணங்களில் நாம் தேங்கி நிற்க முடியாது என்றும், மனித நாகரிகம், சிந்தனைகள் மற்றும் மொழி ஆகியவை தொடர்ந்து உருவாகி வருகின்றன என்றும் வலியுறுத்தினார். இந்தியா உலகின் பழமையான வாழும் நாகரிகங்களில் ஒன்றாகும், ஏனெனில் அது தொடர்ந்து உருவாகி, புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு, மாற்றங்களை வரவேற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் பரந்த மொழியியல் பன்முகத்தன்மை இந்த பரிணாம வளர்ச்சிக்கு ஒரு சான்று மற்றும் ஒற்றுமைக்கான அடிப்படையாக செயல்படுகிறது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், மராத்தி இந்த பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று குறிப்பிட்டு, பாகுபாடு இல்லாமல் தனது குழந்தைகளுக்கு புதிய மற்றும் பரந்த அறிவை வழங்கும் ஒரு தாயுடன் மொழியை ஒப்பிட்டார். மொழி, ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வொரு வளர்ச்சியையும் தழுவுகிறது என்று அவர் கூறினார். மராத்தி மொழி சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என்றும், பிராகிருத மொழியில் குறிப்பிடத்தக்க தாக்கம் உள்ளது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். மனித சிந்தனையை விரிவுபடுத்திய சிறந்த சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். லோகமான்ய திலகரின் கீத ரகசியம் என்ற நூல் சமஸ்கிருத கீதைக்கு விளக்கமளித்து மராத்தி மொழியில் எளிதாக அணுகக்கூடியதாக இருந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். சமஸ்கிருதத்திற்கு மராத்தி விளக்கவுரையுடன் கூடிய தியானேஸ்வரி கீதை, அறிஞர்கள் மற்றும் துறவிகள் கீதையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தரநிலையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பிற இந்திய மொழிகளால் மராத்தி மொழி செழுமையடைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். 'ஆனந்தமடம்' போன்ற படைப்புகளை மராத்தியில் மொழிபெயர்த்த பார்கவ்ராம் விட்டல் வரேகர் மற்றும் பன்னா தாய், துர்காவதி மற்றும் ராணி பத்மினி ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட விந்தா கரண்டிகரின் படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உதாரணங்களை அவர் மேற்கோள் காட்டினார். "இந்திய மொழிகளிடையே ஒருபோதும் பகை இருந்ததில்லை, மாறாக அவை எப்போதும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு வளப்படுத்தியுள்ளன" என்று அவர் வலியுறுத்தினார்.
மொழியின் பெயரால் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகள் நமது மொழிகளின் பகிரப்பட்ட பாரம்பரியத்தால் எதிர்க்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இதுபோன்ற தவறான கருத்துக்களில் இருந்து விலகி இருக்குமாறு அனைவரையும் வலியுறுத்தினார். இன்று, நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் முக்கிய மொழிகளாகப் பார்க்கப்படுகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். மராத்தி உட்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் கல்வியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார். மகாராஷ்டிர இளைஞர்கள் உயர் கல்வி, பொறியியல், மருத்துவப் படிப்புகளை மராத்தி மொழியில் தொடர முடியும் என்று திரு மோடி குறிப்பிட்டார். ஆங்கில புலமை இல்லாததால் திறமைகளை புறக்கணிக்கும் மனநிலை மாறியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
"இலக்கியம் ஒரு கண்ணாடி போன்றது, அது சமூகத்திற்கான வழிகாட்டி" என்று திரு மோடி கூறினார். நாட்டில் இலக்கிய மாநாடு மற்றும் அது தொடர்பான நிறுவனங்களின் முக்கிய பங்குகளை அவர் குறிப்பிட்டார். கோவிந்த் ரானடே, ஹரிநாராயண் ஆப்தே, ஆச்சார்யா ஆத்ரே, வீர சாவர்க்கர் போன்ற மாமனிதர்கள் வகுத்துத் தந்த லட்சியங்களை அகில இந்திய மராத்தி இலக்கிய மகாமண்டல் முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இலக்கிய மாநாட்டின் பாரம்பரியம் 2027-இல் 150 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும், இது 100-வது இலக்கண மாநாட்டைக் குறிக்கும் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார். ஒவ்வொருவரும் இந்த சந்தர்ப்பத்தை சிறப்பானதாக மாற்றி, இப்போதே அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சமூக ஊடகங்கள் மூலம் மராத்தி இலக்கியத்திற்கு சேவை செய்யும் பல இளைஞர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார், மேலும் அவர்களின் திறமைகளை அங்கீகரிக்க ஒரு தளத்தை வழங்குவதை ஊக்குவித்தார். இணையவழி தளங்கள் மற்றும் பாஷினி போன்ற முன்முயற்சிகள் மூலம், மராத்தி, கற்றலை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். இளைஞர்களிடையே மராத்தி மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான போட்டிகளை ஏற்பாடு செய்ய அவர் பரிந்துரைத்தார். இந்த முயற்சிகளும், மராத்தி இலக்கியங்களிலிருந்து கிடைத்த உத்வேகங்களும் 140 கோடி மக்களுக்கு ஒரு வளர்ந்த பாரதத்தை உருவாக்க உத்வேகம் அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மகாதேவ் கோவிந்த் ரானடே, ஹரிநாராயண் ஆப்தே, மாதவ் ஸ்ரீஹரி அனே மற்றும் ஷிவ்ராம் பரஞ்சபே போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளின் சிறந்த பாரம்பரியத்தைத் தொடருமாறு வலியுறுத்தி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
மகாராஷ்டிர முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ்; நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), திரு சரத் பவார்; 98வது மாநாட்டின் தலைவர் டாக்டர் தாரா பவால்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாடு பிப்ரவரி 21 முதல் 23 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்களும் புத்தகக் கண்காட்சியும், கலாச்சார நிகழ்ச்சிகளும் கலந்துரையாடல்களும், நடைபெற உள்ளன. இதில் இலக்கியத்துறையில் பிரபலமானவர்கள் பங்கேற்க உள்ளனர். காலத்தைக் கடந்து நிற்கும் மராத்திய இலக்கியத்தின் சிறப்புகள் குறித்துக் கொண்டாடும் வகையிலும் மொழிப் பாதுகாப்பு, மொழி பெயர்ப்பு மற்றும் இலக்கியப் பணிகளை டிஜிட்டல்மயமாக்குவதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விரிவான விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
71 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் மராத்திய இலக்கிய மாநாடு நடைபெற உள்ளது. இதனைக் குறிக்கும் வகையில், புனேயிலிருந்து தில்லி வரை இலக்கிய ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. மராத்திய இலக்கியத்தின் தனித்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் 1,200 பேர் பயணம் செய்ய உள்ளனர். இந்த மாநாட்டில் 2,600-க்கும் மேற்பட்ட மராத்தியப் பாடல்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. 50 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. 100 புத்தக அரங்குகள் இடம் பெறுகின்றன. இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து இலக்கிய சான்றோர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழி சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
***
RB/DL
(Release ID: 2105432)
Visitor Counter : 23