மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் 3-வது காசி தமிழ்ச் சங்கமத்தைத் தொடங்கி வைத்தனர்


10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழகத்திலிருந்து சுமார் 1,200 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, நமது நாட்டின் கலாச்சார ஒற்றுமையைக் கொண்டாடுகிறோம் - திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 15 FEB 2025 7:24PM by PIB Chennai

 

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் காசித் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது பதிப்பை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில்  இன்று தொடங்கி வைத்தனர்.

3-வது காசி தமிழ்ச் சங்கம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவுக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு - காசி இடையேயும், காவிரி - கங்கை நதிக்கும் இடையேயான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தொடர்பு பற்றியும் பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தமது உரையில், உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் கலாச்சார தலைநகரமாகவும் விளங்கும் காசி, நாகரிகத்தின் வளமான பாரம்பரியத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்றார். தமிழ்நாடு, இந்தியாவின்  ஞானம், இலக்கிய சிறப்பின் இதயமாக திகழ்கிறது என்றும் அவர் எடுத்துரைத்தார். தமிழ் மக்கள், தங்கள் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் உலகெங்கும் கொண்டு சென்று, எங்கு சென்றாலும் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டனர் என்று அவர் கூறினார்.

காசி-தமிழ் சங்கமத்திற்காப  பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த நிகழ்ச்சி வடக்கு மற்றும் தென்னிந்தியாவின் உன்னத பாரம்பரியங்களை இணைக்கும் பாலமாக செயல்படும் என்றார். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு முக்கியமான பாலமாக ரிஷி அகத்தியர் விளங்கியதாக அமைச்சர் கூறினார். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, நமது நாட்டின் கலாச்சார ஒற்றுமையைக் கொண்டாடுகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் தமது உரையில், வாரணாசியில்  மூன்றாவது பதிப்பை ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து காசி தமிழ்ச் சங்கமம் எவ்வாறு கொண்டாடுகிறது என்பதை விளக்கினார். தமிழர்கள் காசிக்குச் செல்ல விரும்பியதைப் போலவே, காசி மக்களும் ராமேஸ்வரத்திற்கு வருகை தர விரும்புவதாகவும், இந்த கலாச்சார தொடர்பு பழங்காலங்களிலிருந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு 5,000 ஆண்டுகளுக்கும் முந்தையது என்றும், ராமாயணம், மகாபாரதம் போன்ற பழைய நூல்களிலும், குறிஞ்சி தினை, எட்டுத்தொகை, கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன என்றும் டாக்டர் முருகன் கூறினார். தமிழ் மொழியையும், திருக்குறளின் பெருமையையும் உலகெங்கும் பரப்பியதற்காக பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

காசி தமிழ் சங்கமத்தின் இந்த ஆண்டின் முக்கிய கருப்பொருள் மகரிஷி அகத்தியர் என்பதாகும். இந்த ஆண்டு, தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1000 பிரதிநிதிகளைக் கொண்ட ஐந்து பிரிவுகள் / குழுக்கள் இதில் பங்கேற்கின்றனர்: (1) மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்; (ii) விவசாயிகள், கைவினைஞர்கள் (iii) தொழில் வல்லுநர்கள், சிறு தொழில்முனைவோர்; (iv) பெண்கள் (சுய உதவிக் குழுவினர், முத்ரா கடன் பயனாளிகள் (v) புத்தொழில், புதுமை, கல்வி தொழில்நுட்பம், ஆராய்ச்சி என 5 பிரிவினர் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டு பல்வேறு பள்ளிகளில் பயிலும் சுமார் 200 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.  முதல் குழுவினர் இன்று (15.02.2025) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கடைசி குழு 2025 பிப்ரவரி 26 அன்று தமிழகம் திரும்பும்.

***

PLM/KV

 


(Release ID: 2103674) Visitor Counter : 56