பிரதமர் அலுவலகம்
பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடக்க உரை
Posted On:
11 FEB 2025 3:41PM by PIB Chennai
மேன்மை மிக்கவர்களே,
நண்பர்களே,
ஒரு எளிய பரிசோதனையுடன் எனது உரையைத் தொடங்குகிறேன்.
உங்கள் மருத்துவ அறிக்கையை செயற்கை நுண்ணறிவு செயலியில் பதிவேற்றினால், அது உங்கள் ஆரோக்கியத்தின் நிலைமையை எந்த தொழில்நுட்ப சொற்களும் இல்லாமல் எளிய மொழியில் விளக்கிச் சொல்ல முடியும். ஆனால், அதே செயலியில் யாரோ ஒருவர் தனது இடது கையால் எழுதும் படத்தை வரையச் சொன்னால், அந்தச் செயலி பெரும்பாலும் வலது கையால் எழுதும் ஒருவரை வரைந்துவிடும். ஏனெனில் அதுதான் பயிற்சி தரவுகளின் ஆதிக்கமாகும்.
செயற்கை நுண்ணறிவின் நேர்மறையான திறன் முற்றிலும் ஆச்சரியமாக இருந்தாலும், நாம் கவனமாகச் சிந்திக்க வேண்டிய பல சார்பு நிலைகளும் உள்ளன என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. அதனால்தான் இந்த உச்சிமாநாட்டை நடத்தியதற்காகவும் என்னை இணைத் தலைவராக அழைத்ததற்காகவும் எனது நண்பரான அதிபர் மக்ரோனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
நண்பர்களே,
செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே நமது ஆட்சி முறை, நமது பொருளாதாரம், நமது பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தை மீள்-வடிவமைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு இந்த நூற்றாண்டில் மானுடத்திற்கான குறிமுறையை எழுதுகிறது. ஆனால், மனித சமுதாய வரலாற்றில் மற்ற தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து இது மிகவும் வேறுபட்டதாகும்.
செயற்கை நுண்ணறிவு முன்னெப்போதும் இல்லாத அளவில் விரைவாக வளர்ந்து வருகிறது. மேலும் விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. எல்லைகளுக்கு இடையே ஆழமான சார்புநிலையும் உள்ளது. எனவே, நமது பகிரப்பட்ட மதிப்புகளை உறுதி செய்யக் கூடிய இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளக் கூடிய, நம்பிக்கையை வளர்க்கக் கூடிய நிர்வாகம் மற்றும் தரநிலைகளை அமைக்க, உலகளாவிய கூட்டு முயற்சிகள் அவசியமாகும்.
ஆனால், ஆளுகை என்பது இடர்ப்பாடுகளையும் போட்டிகளையும் நிர்வகிப்பது மட்டுமல்லாமல், புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் உலகளாவிய நன்மைக்காக அதைப் பயன்படுத்துதல் பற்றியதாகும். எனவே, புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆளுகை குறித்து நாம் ஆழ்ந்து சிந்தித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும்.
ஆளுகை என்பது அனைவருக்கும் அணுகலை உறுதி செய்வதாகும், குறிப்பாக உலக அளவில் தென்பகுதி நாடுகளில் இதை உறுதி செய்ய வேண்டும். கணினியின் சக்தி, திறமை, தரவு அல்லது நிதி ஆதாரங்கள் என எதுவாக இருந்தாலும், இங்குதான் திறன்கள் மிகவும் குறைவாக உள்ளன.
நண்பர்களே,
சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் பல்வேறு துறைகளை மேம்படுத்துவதன் மூலம் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்ற செயற்கை நுண்ணறிவு உதவும். நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான பயணம் எளிதாகவும் விரைவாகவும் இருக்கும் உலகை இது உருவாக்கும்.
இதை அடைவதற்கு, நாம் வளங்களையும் திறமைகளையும் ஒன்றிணைக்க வேண்டும். நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வெளிப்படையான ஆதார அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். சார்பு நிலைகள் இல்லாத தரமான தரவுத் தொகுப்புகளை நாம் உருவாக்க வேண்டும். நாம் தொழில்நுட்பத்தைப் பரவலாக்க வேண்டும் மற்றும் மக்களை மையப்படுத்திய பயன்பாடுகளை உருவாக்க வேண்டும். இணைய பாதுகாப்பு, தவறான தகவல் மற்றும் போலி பிரதிகள்(டீப் ஃபேக்) தொடர்பான பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டும். மேலும், தொழில்நுட்பம் பயனுள்ளதாகவும் திறனுள்ளதாகவும் இருக்க அது உள்நாட்டு சூழல் சார் அமைப்பில் வேரூன்றி இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.
நண்பர்களே,
வேலை இழப்பு என்பது செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய மிகவும் அஞ்சக் கூடிய இடையூறாகும். ஆனால், தொழில் நுட்பத்தால் வேலைவாய்ப்பு குறைவதில்லை என்பது வரலாறு. அதன் தன்மை மாறுகிறது மற்றும் புதிய வகையான வேலைகள் உருவாக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு நமது மக்களுக்கு திறன் பயிற்சி அளித்தல் மற்றும் மறு திறன் பயிற்சி அளித்தலுக்கு நாம் முதலீடு செய்ய வேண்டும்.
நண்பர்களே,
செயற்கை நுண்ணறிவுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும் என்பது கவனிக்கப்பட வேண்டும். அதன் எதிர்காலத்திற்கு எரிபொருளாக பசுமை சக்தி தேவைப்படும்.
சூரியனின் சக்தியைப் பயன்படுத்துவதற்கு சர்வதேச சூரியக் கூட்டமைப்பு போன்ற முன்முயற்சிகள் மூலம் இந்தியாவும் பிரான்சும் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகின்றன. செயற்கை நுண்ணறிவுக்கு நாம் நமது கூட்டாண்மையை முன்னேற்றுவதால், இது ஒரு சிறந்த மற்றும் பொறுப்பான எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக நீடித்த தன்மையிலிருந்து புதுமை கண்டுபிடிப்புக்கான இயல்பான முன்னேற்றமாகும்.
அதே நேரத்தில், நிலையான செயற்கை நுண்ணறிவு என்பது தூய்மையான எரிசக்தியைப் பயன்படுத்துவது மட்டும் குறிக்காது. செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் என்பவை அளவு, தரவுத் தேவைகள் மற்றும் ஆதாரத் தேவைகள் ஆகியவற்றில் திறமையானதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மனித மூளை ஒளி விளக்குகளை விட குறைந்த சக்தியைப் பயன்படுத்தி கவிதைகளை உருவாக்கவும் விண்வெளிக் கப்பல்களை வடிவமைக்கவும் செய்கிறது.
நண்பர்களே,
இந்தியா 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மின்னணு பொது உள்கட்டமைப்பை மிகக் குறைந்த செலவில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இது வெளிப்படையான, அணுகக்கூடிய கட்டமைப்பாக நிறுவப்பட்டுள்ளது. இதற்கு நெறிமுறைகள் உள்ளன இது நமது பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கும், நிர்வாகத்தை சீர்திருத்துவதற்கும், நமது மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கும் பரந்த அளவிலான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
எங்களுடைய தரவு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு மூலம் தரவின் ஆற்றலைத் வெளிப்படுத்தியுள்ளோம். மேலும், மின்னணு வர்த்தகத்தை பரவலாகவும் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றியுள்ளோம். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தேசிய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் அடித்தளமாகும்.
அதனால்தான், எங்களுடைய ஜி-20 தலைமைத்துவத்தின் போது, செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன், நன்மை அளிக்கும் வகையில் அனைவரும் பயன்படுத்துவதில் ஒருமித்த கருத்தை உருவாக்கினோம். தற்போது, செயற்கை நுண்ணறிவை அணுகுதல் மற்றும் தரவு தனியுரிமை தொடர்பான தொழில்நுட்ப-சட்ட தீர்வுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை உருவாக்கி வருகிறோம். உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு திறமை அமைப்புகளில் ஒன்று எங்களிடம் உள்ளது. பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு இந்தியா தனது சொந்த பெரும் மொழி மாதிரியை உருவாக்கி வருகிறது. கணினி கணக்கீடு போன்ற ஆதாரங்களைத் திரட்டுவதற்கான தனித்துவமான பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியும் எங்களிடம் உள்ளது. இது எங்களுடைய புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு குறைந்த விலையில் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு எதிர்காலம் சிறந்தது மற்றும் அனைவருக்குமானது என்பதை உறுதிப்படுத்த இந்தியா தனது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது.
நண்பர்களே,
மனித சமுதாயத்தின் போக்கை வடிவமைக்கும் செயற்கை நுண்ணறிவு தருணத்தில் நாம் இருக்கிறோம். மனிதர்களை விட இயந்திரங்கள் புத்திசாலித்தனத்தில் சிறந்து விளங்குவதைப் பற்றி சிலர் கவலைப்படுகிறார்கள். ஆனால், நமது கூட்டு எதிர்காலத்திற்கான திறவுகோலையும், மனிதர்களாகிய நம்மைத் தவிர வேறு யாரும் பகிர்ந்து கொள்ளவில்லை.
அந்த பொறுப்புணர்வு நம்மை வழிநடத்த வேண்டும்.
நன்றி.
---
TS/IR/KPG/DL
(Release ID: 2101955)
Visitor Counter : 13