பிரதமர் அலுவலகம்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
02 FEB 2025 3:39PM by PIB Chennai
வெற்றிவேல் முருகனுக்கு... அரோகரா!
மாண்புமிகு அதிபர் திரு பிரபோவோ அவர்களே, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம் அவர்களே, நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன் அவர்களே, தமிழ்நாடு மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்களே, ஆச்சார்யர்களே, புலம்பெயர்ந்த இந்தியர்களே, இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த குடிமக்களே!
ஜகார்த்தாவில் உள்ள முருகன் கோவிலின் மகா கும்பாபிஷேகத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் ஜகார்த்தாவிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான உறவைப் போலவே இந்த நிகழ்விலும் என் இதயம் நெருக்கமாக உள்ளது! சில நாட்களுக்கு முன்பு, அதிபர் திரு பிரபோவோ 140 கோடி இந்தியர்களின் அன்பைத் தன்னுடன் சுமந்துகொண்டு பாரதத்திலிருந்து சென்றார். அவர் மூலம், நீங்கள் அனைவரும் பாரதத்தின் நல்வாழ்த்துகளை பெற்றிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
ஜகார்த்தா கோவிலின் மகா கும்பாபிஷேகத்தின் புனிதமான சந்தர்ப்பத்தில், உங்கள் அனைவருக்கும், பாரதம் மற்றும் இந்தோனேசியா உட்பட உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான முருகப்பெருமானின் பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருப்புகழ் பாடல்கள் மூலம் முருகப்பெருமான் போற்றப்பட வேண்டும் என்றும், கந்தசஷ்டி கவசம் என்ற மந்திரம் அனைத்து மக்களையும் காக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன். தங்களின் கடின உழைப்பால் கோவில் கட்டும் கனவை நனவாக்கிய டாக்டர் கோபாலன் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
பாரதம் மற்றும் இந்தோனேசிய உறவு புவிசார் அரசியலுக்கு அப்பாற்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரீகத்தால் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம். பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றில் நாம் இணைக்கப்பட்டுள்ளோம். நமது இணைப்பு நம்பிக்கை மற்றும் ஆன்மீகம் சார்ந்தது. நமது தொடர்பு முருகனுக்கும், பகவான் ஸ்ரீராமருக்கும் இடையேயான தொடர்பு. நமது தொடர்பு புத்த பகவானுடனும் தொடர்புடையது. அதனால்தான் நண்பர்களே, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இந்தோனேசியாவில் உள்ள பிரம்பனன் கோவிலுக்குச் சென்று கைகளைக் கூப்பினால், அவர்கள் காசி மற்றும் கேதார்நாத்தில் இருப்பது போன்ற அதே ஆன்மீக உணர்வை அனுபவிக்கிறார்கள். இந்தோனேசியாவில் உள்ள போரோபுதூர் ஸ்தூபி, பாரதத்தில் உள்ள சாரநாத் மற்றும் புத்தகயாவில் நாம் அனுபவிக்கும் புத்தரின் அதே போதனைகளைப் பிரதிபலிக்கிறது. இன்றும் ஒடிசாவில் பாலி ஜாத்ரா கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் ஒரு காலத்தில் இந்தியாவையும் இந்தோனேசியாவையும் வணிக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இணைத்த பண்டைய கடல் பயணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
நமது உறவு பல வலுவான இழைகளால் பிணைக்கப்பட்டுள்ளது. அதிபர் திரு பிரபோவோ சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தபோது, நாங்கள் இருவரும் இந்தப் பகிரப்பட்ட பாரம்பரியத்தின் பல அம்சங்களைப் பற்றி விவாதித்தோம். இன்று, ஜகார்த்தாவில் உள்ள இந்த பிரமாண்ட முருகன் கோவில் திறப்பு விழாவுடன், நமது பண்டைய பாரம்பரியத்தில் ஒரு புதிய பொன்னான அத்தியாயம் சேர்க்கப்படுகிறது. இந்த ஆலயம் நமது நம்பிக்கையின் மையமாக மட்டுமல்லாமல், நமது கலாச்சார விழுமியங்களுக்கான மையமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
நண்பர்களே,
இக்கோவிலில் முருகப்பெருமானுடன் மேலும் பல தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பன்முகத்தன்மை, நமது கலாச்சாரத்தின் அடித்தளம். இந்தோனேசியாவிலும் சரி, பாரதத்திலும் சரி, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ வழிவகுப்பது பன்முகத்தன்மையுடன் கூடிய நமது எளிமைதான். அதனால்தான் இன்றைய புனிதமான சந்தர்ப்பம் வேற்றுமையில் ஒற்றுமைக்கு நம்மைத் தூண்டுகிறது.
நண்பர்களே,
நமது கலாச்சார விழுமியங்கள், நமது பாரம்பரியம், நமது மரபு, இன்று இந்தோனேசியாவிற்கும் பாரதத்திற்கும் இடையே மக்களிடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்துகின்றன. பிரம்பனன் கோவிலைக் கூட்டாகப் பாதுகாக்க முயற்சி எடுத்துள்ளோம். போரோபுதூர் புத்த கோவிலுக்கான பரஸ்பரம் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். அயோத்தியில் நடந்த இந்தோனேசிய ராம்லீலா நிகழ்ச்சிகளை நான் குறிப்பிட்டேன்- இதுபோன்ற நிகழ்ச்சிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதிபர் திரு பிரபோவோவுடன் இணைந்து, இந்தத் திசையில் நாம் பெரும் வேகத்துடன் முன்னேறுவோம் என்று நான் நம்புகிறேன். நமது கடந்த காலம் பொன்னான எதிர்காலத்திற்கான அடித்தளமாக அமையும். மீண்டும் ஒருமுறை, அதிபர் திரு பிரபோவோவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், கோவிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும் .பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2098913®=3&lang=1
TS/BR/KR
(Release ID: 2098913)
(Release ID: 2099051)
Visitor Counter : 11