நிதி அமைச்சகம்
சமமான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்காகக் கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசு தீவிரம்: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25
Posted On:
31 JAN 2025 1:40PM by PIB Chennai
'வளர்ந்த பாரதம் @ 2047' என்ற அரசின் தொலைநோக்குப்பார்வை 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற கருத்தை உள்ளடக்கி உள்ளது. ஏனெனில் இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், கிராமப்புறங்களில் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. 'முழுமையான அரசு' என்ற உத்தியின் மூலம் அடையப்படும் விரிவான 'அனைவருக்கும் நலன்' அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 தெரிவிக்கிறது. இந்த ஆவணத்தை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கிராமப்புற வீட்டுவசதி, குடிநீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு, தூய்மையான எரிபொருள், சமூக பாதுகாப்பு மற்றும் கிராமப்புற இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேளாண் நடவடிக்கைகளாக இருந்தாலும், ஆளுகையாக இருந்தாலும், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை ஊரக பொருளாதாரத்திற்கு எடுத்துச் செல்வது என்பது ஊரக வளர்ச்சித் திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது என்பதை ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
ஊரக உள்கட்டமைப்பு
குறிப்பாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய பழங்குடியினர் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு சிறப்பு உந்துதல் அளிக்கும் வகையில், பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், சாலை வசதி இல்லாத தனியார் குடியிருப்புகளுக்கு இணைப்பை வழங்குவதற்காக 100 சதவீத மக்கள் தொகை வரையறைகளைத் தளர்த்தி பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ஒரு தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 8,000 கி.மீ நீளத்திற்கு சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற வீட்டுவசதி: அடையாளம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்
பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற குடும்பங்களுக்கு வீட்டுவசதி வழங்குவது நீண்ட காலமாக இந்தியாவின் வளர்ச்சி உத்தியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. 'பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் வீடு' குறித்த நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் 'அனைவருக்கும் வீடு' என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 2016 முதல் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2.69 கோடி வீடுகளின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல்: கிராமப்புற முன்னேற்றத்தை மேம்படுத்துதல்
நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதன் மூலம், வீட்டுவசதி, சுகாதாரம், குடிநீர் விநியோகம் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்து, கிராமப்புற வளர்ச்சி உலகளாவிய இலக்குகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற இந்தியாவின் அறைகூவல் மற்றும் 2047-க்குள் வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வை ஆகியவை நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான பாதையை அமைக்கின்றன. மாநிலங்களுக்கு இடையே கூட்டுறவு மற்றும் போட்டி கூட்டாட்சியை வலியுறுத்தும் 'முழுமையான அரசு' உத்தி பின்பற்றப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097875
***
TS/RB/DL
(Release ID: 2098209)
Visitor Counter : 10