வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-ஓமன் கூட்டுக்குழுக் கூட்டம் நடைபெற்றது; வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தலைவர்கள் கவனம் செலுத்தினர்

Posted On: 28 JAN 2025 5:03PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் 2025 ஜனவரி 27 முதல் 28 வரை தமது ஓமன் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.

இந்த பயணத்தின் போது இந்தியா-ஓமன் கூட்டுக் குழு கூட்டத்தின் 11-வது அமர்வுக்கு, ஓமன் வர்த்தகம், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திரு கைஸ் பின் முகமது அல் யூசுப்புடன் இணைந்து திரு கோயல் தலைமை தாங்கினார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிற முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பயனுள்ள விவாதங்கள்  இக்கூட்டத்தில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் திரு கைஸுடன்  திரு கோயல் இருதரப்பு பேச்சு நடத்தினார். இந்தியா-ஓமன் இடையோன  இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து விரிவான மறுஆய்வு மேற்கொண்டதுடன், பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

இந்தியா-ஓமன் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் குறித்தும் இரு அமைச்சர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்தியா-ஓமன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கான நெறிமுறையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

ஜனவரி 28 அன்று, ஓமன் நாட்டின் சர்வதேச உறவுகள், ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான துணை அமைச்சரும், மன்னரின் சிறப்பு பிரதிநிதியுமான திரு சையத் ஆசாத் பின் தாரிக் அல் சையத்தை  திரு கோயல் சந்தித்தார்.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்காக அந்நாட்டு நிதி அமைச்சர் திரு சுல்தான் பின் சலீம் அல் ஹப்சி மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தடையற்ற மண்டலங்களுக்கான பொது ஆணையத்தின் தலைவர் திரு அலி பின் மசூத் அல் சுனைதி ஆகியோருடனும் திரு கோயல் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.

ஓமன் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இந்தியா-ஓமன் கூட்டு வர்த்தக குழுக் கூட்டத்தில் அமைச்சர் திரு கோயல் பங்கேற்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097043

***

TS/IR/RS/DL


(Release ID: 2097099) Visitor Counter : 23