வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய காபிக்கு உலகளாவிய தேவை

Posted On: 20 JAN 2025 3:54PM by PIB Chennai

காபியுடனான இந்தியாவின் பயணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, புகழ்பெற்ற புனித துறவி பாபா பூதன் 1600-ம் ஆண்டுகளில் கர்நாடகாவின் மலைகளுக்கு ஏழு மொச்சை விதைகளைக் கொண்டு வந்தார். பாபா பூதன்கிரி மலையில் உள்ள தனது ஆசிரமத்தின் முற்றத்தில் இந்த விதைகளை நட்டு வைத்த  அவரது எளிய செயல், உலகின் முன்னணி காபி உற்பத்தியாளர்களில் ஒன்றாக இந்தியாவின் எழுச்சியை அறியாமலேயே ஏற்படுத்தி தந்தது. பல நூற்றாண்டுகளாக, இந்தியாவில் காபி சாகுபடி வளர்ந்து வரும் தொழிலாக உருவாகியுள்ளது. நம் நாட்டின் காபி இப்போது உலகம் முழுவதும் பரவலாக விரும்பப்படுகிறது. இந்தியா இப்போது உலகளவில் ஏழாவது பெரிய காபி உற்பத்தியாளராக உள்ளது. அதன்  ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 1.29 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது 2020-21-ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட 719.42 மில்லியன் டாலர் மதிப்பை விட இரு மடங்காகும்.

2025 ஜனவரி முதல் பாதியில் இத்தாலி, பெல்ஜியம், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா 9,300 டன்களுக்கும் அதிகமான காபியை ஏற்றுமதி செய்தது. இந்தியாவின் காபி உற்பத்தியில் ஏறத்தாழ நான்கில் மூன்று பங்கு அராபிகா மற்றும் ரோபஸ்டா காபிக்கொட்டைகள் ஆகும். இவை முதன்மையாக வறுக்கப்படாத கொட்டைகளாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இருப்பினும், வறுத்த மற்றும் உடனடி காபி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

கஃபே கலாச்சாரத்தின் எழுச்சி, அதிக அளவில் செலவழிக்கும் வகையில் அதிக வருமானம் மற்றும் தேநீரை விட காபிக்கு வளர்ந்து வரும் விருப்பம் காரணமாக, இந்தியாவில் காபி நுகர்வு சீராக அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு  நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் காணப்படுகிறது. உள்நாட்டு நுகர்வு 2012-ம் ஆண்டில் 84,000 டன்னிலிருந்து 2023-ம் ஆண்டில் 91,000 டன்னாக அதிகரித்துள்ளது. ஏனெனில், காபி அன்றாட வாழ்க்கையில் பிரதானமான ஒன்றாக உள்ளது.

இந்தியாவின் காபி முதன்மையாக சுற்றுச்சூழல் வளம் நிறைந்த மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வளர்க்கப்படுகிறது, இது பல்லுயிர் பெருக்கத்திற்கு பிரபலமான பகுதிகளாகும். காபி உற்பத்தியில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. 2022-23-ம் ஆண்டில் கர்நாடகம் 248,020 மெட்ரிக் டன் அளவிற்கு காபி உற்பத்தி செய்தது. அதற்கு அடுத்த இடங்களில் கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் உள்ளன.

காபி உற்பத்தியை அதிகரிக்கவும், வளர்ந்து வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவையைப் பூர்த்தி செய்யவும், இந்திய காபி வாரியம் பல முக்கியமான முயற்சிகளை தொடங்கியுள்ளது. ஒருங்கிணைந்த காபி மேம்பாட்டுத் திட்டத்தின் (ஐ.சி.டி.பி) மூலம் விளைச்சலை மேம்படுத்துதல், இதுவரை பயிரிடப்படாத பகுதிகளில் காபி சாகுபடியை விரிவுபடுத்துதல் மற்றும் காபி சாகுபடியின் நிலைத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2094542

***

TS/IR/AG/KR

 


(Release ID: 2094557) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi , Bengali