உள்துறை அமைச்சகம்
சென்னை உள்ளிட்ட ஏழு விமான நிலையங்களில் விரைவு குடியேற்றப் பதிவு சேவைகளுக்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அகமதாபாதில் நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
15 JAN 2025 12:48PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரான திரு அமித் ஷா, 2025 ஜனவரி 16-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் 'விரைவு குடியேற்றப் பதிவு சேவைத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். உள்துறை அமைச்சர் ஏற்கனவே 2024 ஜூன் 22-ம் தேதி புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்திலிருந்து இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 'விரைவு குடியேற்றப் பதிவு சேவை – நம்பிக்கைக்குரிய பயணிகள் திட்டம்' என்பது 'வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையின் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த குடியேற்ற வசதிகளை வழங்குவதும், சர்வதேச பயணத்தை தடையற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதே இதன் நோக்கமாகும். முதற்கட்டமாக, இந்த வசதி இந்திய குடிமக்கள், இந்திய வம்சாவளி அட்டைதாரர்களுக்கு இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஆன்லைன் https://ftittp.mha.gov.in வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர, விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பயோமெட்ரிக் தரவு வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் அல்லது விமான நிலையம் வழியாக செல்லும்போது பெற்றுக் கொள்ளப்படும்.
பதிவு செய்யப்பட்ட பயணிகள் விமான நிறுவனம் வழங்கிய போர்டிங் பாஸை இ-கேட்டில் ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் அவர்களின் கடவுச்சீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். வருகை மற்றும் புறப்பாடுகளின் போது பயணிகளின் பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு-வாயில்கள் அங்கீகரிக்கப்பட்டு அவை தானாகவே திறக்கப்படும். இதனையடுத்து பயணியின் குடியேற்றப் பதிவிற்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.
நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக, டெல்லி தவிர, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய ஏழு முக்கிய விமான நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
***
TS/SV/KPG/KV
(Release ID: 2093049)
Visitor Counter : 23