வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தேசிய மஞ்சள் வாரியத்தை தொடங்கி வைத்தார் - நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் நிறுவப்பட்டுள்ளது

Posted On: 14 JAN 2025 12:57PM by PIB Chennai

தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். திரு பியூஷ் கோயல் அதன் முதல் தலைவராக திரு பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். வாரியத்தின் தலைமையகம் நிஜாமாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய மஞ்சள் வாரியத்தின் தொடக்கம் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைக் கொண்டாட்டங்களின் புனித நாளில் அமைந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் தேசிய மஞ்சள் வாரியத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று அவர் எடுத்துரைத்தார். ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் வாரியத்தில் சேர்க்கப்படுவார்கள் என அவர் கூறினால்

மஞ்சள் 'கோல்டன் ஸ்பைஸ்' என்றும் அழைக்கப்படுகிறது என்று கூறிய அவர், புதிதாக அமைக்கப்பட்ட வாரியம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்களில் உள்ள மஞ்சள் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் என்று சுட்டிக்காட்டினார். ஆந்திரா, தெலுங்கானாவில் மஞ்சள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மகத்தான வாய்ப்புகள் இருப்பதாகவும், மஞ்சள் வாரியத்தை அமைப்பது நாட்டில் மஞ்சள் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

புதிய வாரியம் புதிய மஞ்சள் பொருட்களின் ஆராய்ச்சி, மேம்பாட்டை ஊக்குவிக்கும் என்றும், வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதற்காக மஞ்சள் தொடர்பான பொருட்களின் மதிப்பு கூட்டலை கவனிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மஞ்சளின்  மருத்துவ பண்புகள், அதன் விளைச்சலை அதிகரிப்பதற்கான வழிகள், புதிய சந்தைகளில் வர்த்தகத்தை வளர்ப்பதற்கான வழிகள், விநியோகச் சங்கிலியை அதிகரிப்பது ஆகியவை குறித்தும் வாரியம் ஆராயும் என்று அவர் கூறினார். மஞ்சள் உற்பத்தி, ஏற்றுமதியின் தரத்தையும் இந்த வாரியம் உறுதி செய்யும் என்று திரு பியூஷ் கோயல் எடுத்துரைத்தார்.

கடந்த ஆண்டு 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3.05 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு 10.74 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது என்று திரு கோயல் கூறினார். உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 70% இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் 30 வகையான மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் உள்ளிட்டோர இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

***

PLM/DL


(Release ID: 2092813) Visitor Counter : 38