இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
அஸ்மிதா கேலோ இந்தியா மகளிர் யோகாசன லீக் 2024-25-ல் 7000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Posted On:
10 JAN 2025 4:02PM by PIB Chennai
தேசிய அஸ்மிதா கேலோ இந்தியா மகளிர் யோகாசன லீக் 2024-25 நிகழ்வு பக்கர்வாலா, நங்லோய் நஜாப்கர் சாலையில் உள்ள ஆனந்த் தாம் ஆசிரமத்தில் முடிவடைந்தது. ஜனவரி 5 முதல் 7 வரை நடைபெற்ற லீக்கின் இறுதி கட்டத்தில் 270 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் அடங்கும்.
மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யோகாசனம் சேர்க்கப்படுவது உட்பட இந்தியாவில் யோகாசனத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். யோகாசனம் இப்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (ஜப்பான்) ஒரு விளையாட்டாக சேர்க்கப்பட்டுள்ளது என்றும், உத்தராகண்டில் வரவிருக்கும் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இது ஒரு போட்டி விளையாட்டாக சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்ற மண்டல சாம்பியன்ஷிப் போட்டிகளில் 7000-க்கும் மேற்பட்ட பெண் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த லீக்கில் பாரம்பரிய யோகாசனம், கலை யோகாசனம் (ஒற்றை), கலை யோகாசனம் (ஜோடி), தாள யோகாசனம் (ஜோடி) மற்றும் கலை யோகாசனம் (குழு) ஆகிய ஐந்து பிரிவுகள் இடம்பெற்றன. இந்தியாவின் நான்கு மண்டலங்களைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவுகளில் தலா முதல் எட்டு விளையாட்டு வீரர்கள் ஐந்து பிரிவுகளில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு போட்டிகள் நடைபெற்ற நான்கு மண்டலங்கள் பீகார் (கிழக்கு மண்டலம்), ராஜஸ்தான் (மேற்கு மண்டலம்), தமிழ்நாடு (தெற்கு மண்டலம்) மற்றும் உத்தரபிரதேசம் (வடக்கு மண்டலம்) ஆகும்.
யோகாசன பாரத் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களிடையே ஆரோக்கியமான போட்டி காணப்பட்டது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் சுமார் ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை வழங்கியது.
மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்த அஸ்மிதா யோகாசன லீக், யோகாசன விளையாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களின் குடும்பத்தை உடல் தகுதியுடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. 2024-ம் ஆண்டில் மொத்தம் 163 அஸ்மிதா மகளிர் லீக்குகள் நடைபெற்றன. இதில் 12 விளையாட்டுப் பிரிவுகளில் 17000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
ஐந்து பிரிவுகளில் வெற்றியாளர்கள் பின்வருமாறு:
• பாரம்பரிய யோகாசனம்:அனுஷ்கா சாட்டர்ஜி (மேற்கு வங்கம்), சப்னா பால் (மத்திய பிரதேசம்)
• கலை யோகாசனம் தனிநபர்:சீமா நியோபேன் (டெல்லி), சர்பஸ்ரீ மண்டல் (மேற்கு வங்கம்)
• கலை யோகாசனம் ஜோடி: நிஷா கோட்போலே & அவிகா மிஸ்ரா (மத்திய பிரதேசம்), கல்யாணி சூட் & சக்குலி செலோகர் (மகாராஷ்டிரா)
• ரிதமிக் யோகாசனம் ஜோடி: காவ்யா சைனி - யாத்ரி யஷ்வி (உத்தராகண்ட்), குஷி தாகூர் - கீதா அஞ்சலி (தில்லி).
• கலை யோகாசனம் குழு: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த அணிகள்.
அஸ்மிதா மகளிர் லீக் குறித்த பின்னணி:
பல்வேறு விளையாட்டுகளில் அணிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் விளையாட்டுகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், நாடு முழுவதும் பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த பெண் விளையாட்டு வீரர்களுக்கு போட்டியிடும் வாய்ப்புகளை வழங்கவும்,இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்), தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுடன் இணைந்து, பல வயதினருக்கும் கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் லீக் போட்டிகளை நடத்துகிறது.
***
TS/PKV/RJ/DL
(Release ID: 2091870)
Visitor Counter : 32