பிரதமர் அலுவலகம்
ஜீனோம்இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை
ஜீனோம்இந்தியா திட்டம் (Genome India Project)நாட்டின் உயிரி தொழில்நுட்ப அம்சத்தில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது. இந்த திட்டத்துடன் தொடர்புடையவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்: பிரதமர்
21-ம் நூற்றாண்டில், உயிரி தொழில்நுட்பம், உயிரி கழிவுப் பொருட்கள் ஆகியவற்றின் இணைப்பு, வளர்ச்சியடைந்த இந்தியாவானது உயிரி பொருளாதாரமாக மாறிய அடித்தளத்தின் முக்கிய பகுதியாகும்: பிரதமர்
உயிரி பொருளாதாரம் நீடித்த வளர்ச்சி, புதுமையை துரிதப்படுத்துகிறது: பிரதமர்
உலகின் முக்கிய மருந்து தயாரிப்பு மையமாக இந்தியா உருவாக்கியுள்ள அடையாளத்திற்கு தற்போது நாடு புதிய பரிமாணத்தை அளிக்கிறது: பிரதமர்
உலகளாவிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக உலக நாடுகள் நம்மை எதிர்நோக்கி காத்திருக்கின்றன, இது நமது வருங்கால தலைமுறையினருக்கு பொறுப்பும், வாய்ப்புமாகும்: பிரதமர்
மக்கள் சார்ந்த நமது ஆளுகை வழிமுறை, நமது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை உலகிற்கு ஒரு புதிய மாதிரியை அளித்துள்ளது போலவே, மரபணு ஆராய்ச்சித் துறையில் இந்தியாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும்: பிரதமர்
Posted On:
09 JAN 2025 5:53PM by PIB Chennai
ஜீனோம்இந்தியா திட்டத்தை இன்று தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆராய்ச்சித் துறையில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க அடியை இன்று எடுத்து வைத்துள்ளது என்று கூறினார். ஜீனோம்இந்தியா திட்டத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும், கோவிட் பெருந்தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு இடையிலும் நமது விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் பணியாற்றி திட்டத்தை முடித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த ஆராய்ச்சியில் ஐஐஎஸ்சி, ஐஐடி, சிஎஸ்ஐஆர் மற்றும் டிபிடி-பிரிக் போன்ற 20-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். 10,000 இந்தியர்களின் மரபணு வரிசைகள் அடங்கிய தகவல்கள் தற்போது இந்திய உயிரியல் தரவு மையத்தில் உள்ளன என்றும் அவர் கூறினார். உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையில் இந்தத் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த திரு மோடி, இத்திட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டினார்.
"உயிரி தொழில்நுட்ப புரட்சியில் ஜீனோம்இந்தியா திட்டம் ஒரு முக்கிய மைல்கல்" என்று திரு மோடி கூறினார். பல்வேறு தரப்பட்ட மக்களில் 10,000 நபர்களின் மரபணுக்களை வரிசைப்படுத்துவதன் மூலம் இந்த திட்டம் வெற்றிகரமாக ஒரு மாறுபட்ட மரபணு தொகுப்பு வளத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் மரபணு சூழலை புரிந்துகொள்ள அறிஞர்களுக்கு உதவும் வகையில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த தரவு இப்போது கிடைக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் தரவு தகவல் நாட்டின் கொள்கை உருவாக்கம், திட்டமிடலுக்கு பெரிதும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
உணவு, மொழி, புவியியல் ஆகியவற்றில் மட்டுமின்றி, மக்களின் மரபணு அமைப்பிலும் இந்தியாவின் பரந்துபட்ட தன்மை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்திய பிரதமர், நோய்களின் தன்மை பெருமளவில் வேறுபடுகிறது என்றும், பயனுள்ள சிகிச்சையை அளிக்க மக்களின் மரபணு அடையாளத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டார். பழங்குடியின சமூகங்களில் அரிவாள் செல் ரத்த சோகை நோயின் குறிப்பிடத்தக்க சவாலையும், அதை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய இயக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்த பிரச்சினை பிராந்தியங்களுக்கு இடையில் வேறுபடக்கூடும் என்றும், இந்திய மக்கள்தொகையின் தனித்துவமான மரபணு வடிவங்களைப் புரிந்துகொள்ள முழுமையான மரபணு ஆய்வு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் புரிதல் குறிப்பிட்ட குழுக்களுக்கு குறிப்பிட்ட தீர்வுகளையும், பயனுள்ள மருந்துகளையும் உருவாக்க உதவும் என்று திரு மோடி கூறினார். நோக்கம் மிகவும் விரிவானது என்றும் அரிவாள் செல் ரத்த சோகைநோய் ஒரு உதாரணம் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரவும் பல மரபணு நோய்கள் குறித்து நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லை என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் இதுபோன்ற அனைத்து நோய்களுக்கும் பயனுள்ள சிகிச்சையை உருவாக்க ஜீனோம்இந்தியா திட்டம் உதவும் என்று தெரிவித்தார்.
"21 -ம் நூற்றாண்டில் உயிரி தொழில்நுட்பம், உயிரி பொருண்மை ஆகியவற்றின் இணைப்பு, வளர்ந்த இந்தியாவை உயிரி பொருளாதாரமாக உருவாக்குவதற்கான முக்கிய அடித்தளத்தை உருவாக்குகிறது" என்று திரு மோடி கூறினார். இயற்கை வளங்களை அதிகபட்ச அளவில் பயன்படுத்துவது, உயிரி அடிப்படையிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஊக்குவிப்பது, இந்தத் துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை உயிரி பொருளாதாரத்தின் இலக்கு என்று அவர் குறிப்பிட்டார். உயிரி பொருளாதாரம் நீடித்த வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். 2014-ம் ஆண்டில் 10 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த பத்தாண்டுகளில் தற்போது 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக விரைவாக வளர்ந்துள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியா தனது உயிரி பொருளாதாரத்தை புதிய உச்சத்திற்கு உயர்த்த முயற்சித்து வருவதை எடுத்துரைத்த அவர், சமீபத்தில் பயோ இ3 கொள்கையை அறிமுகப்படுத்தியதையும் குறிப்பிட்டார். இந்தக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வை குறித்து பேசிய திரு மோடி, தகவல் தொழில்நுட்பப் புரட்சியைப் போன்று, உலக உயிரி தொழில்நுட்பத் துறையில் இந்தியா ஒரு தலைமைத்துவமாக உருவெடுக்க இது உதவும் என்று கூறினார். இந்த முயற்சியில் விஞ்ஞானிகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்த அவர், அவர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஒரு பெரிய மருந்து சேவை மையமாக இந்தியா வளர்ந்து வரும் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், கடந்த பத்தாண்டுகளில் பொது சுகாதாரப் பராமரிப்பு, லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு இலவச சிகிச்சை அளித்தல், மக்கள் மருந்தக மையங்கள் மூலம் 80% தள்ளுபடியில் மருந்துகளை வழங்குதல், நவீன மருத்துவ உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் புரட்சிகரமான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது என்று குறிப்பிட்டார். கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் மருந்து சூழல் அமைப்பு தனது வலிமையை நிரூபித்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவிற்குள் மருந்து உற்பத்திக்கான வலுவான விநியோகம், மதிப்புச் சங்கிலியை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். ஜீனோம்இந்தியா இந்த முயற்சிகளை மேலும் துரிதப்படுத்தி உத்வேகப்படுத்தும் என்று அவர் கூறினார்.
"உலகளாவிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக உலகம் இந்தியாவை எதிர்பார்க்கிறது, எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பொறுப்பையும் வாய்ப்பையும் அளிக்கிறது" என்று திரு மோடி கூறினார். கடந்த பத்தாண்டுகளாக கல்வியின் அனைத்து நிலைகளிலும் ஆராய்ச்சி மற்றும் புதுமைப் படைப்புகளில் வலுவான கவனம் செலுத்தும் வகையில் பரந்த ஆராய்ச்சி சூழலை இந்தியா உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
"10,000-க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் மாணவர்களுக்கு நாள்தோறும் புதிய பரிசோதனைகளை நடத்த உதவுகின்றன" என்று திரு மோடி கூறினார். இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவளிக்க நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அடல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பிஎச்.டி. படிப்புகளின் போது ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்க பிரதமரின் ஆராய்ச்சி கல்வி உதவித்தொகை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். பல்துறை, சர்வதேச ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக தேசிய ஆராய்ச்சி நிதியம் உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், அறிவியல், பொறியியல், சுற்றுச்சூழல், சுகாதாரம் போன்ற துறைகளுக்கு அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார். சூரிய உதய தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் முதலீட்டை அதிகரிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் தொகுப்பை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும், இது உயிரி தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்றும், இளம் விஞ்ஞானிகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஒரே நாடு ஒரே சந்தா" என்ற அரசின் சமீபத்திய முக்கியத்துவம் வாய்ந்த முடிவைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த முயற்சி இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மதிப்புமிக்க உலகளாவிய பத்திரிகைகளை எளிதாகவும், கட்டணமின்றியும் அணுகுவதை உறுதி செய்யும் என்று குறிப்பிட்டார். இந்தியாவை 21-ம் நூற்றாண்டின் அறிவு, கண்டுபிடிப்பு மையமாக மாற்றுவதற்கு இந்த முயற்சிகள் பெரிதும் பங்களிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
"இந்தியாவின் மக்கள் சார்ந்த ஆளுகை, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை உலகிற்கு ஒரு புதிய முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளன" என்று பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தனது உரையில் நிறைவாக பேசிய அவர், மரபணு ஆராய்ச்சித் துறையில் இந்தியாவின் பங்களிப்பை இது போன்ற முயற்சிகள் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஜீனோம்இந்தியா திட்டம் வெற்றி பெற பிரதமர் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
***
TS/IR/AG/DL
(Release ID: 2091582)
Visitor Counter : 17
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam