பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் முதலாவது பசுமை ஹைட்ரஜன் மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

குறிப்பிடத்தக்க பசுமை எரிசக்தி முன்முயற்சிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கியுள்ள இது ஆந்திராவுக்கு ஒரு பெரிய நாள்: பிரதமர்

ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சி என்பது எங்களது தொலைநோக்குப் பார்வை, ஆந்திரப் பிரதேச மக்களுக்கு சேவை செய்வது எங்களது உறுதி: பிரதமர்

எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான மையமாக ஆந்திரா உருவெடுக்கும்: பிரதமர்
நகரமயமாக்கலை ஒரு வாய்ப்பாக எங்கள் அரசு பார்க்கிறது: பிரதமர்

கடல் தொடர்பான வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள நீலப் பொருளாதாரத்தை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்: பிரதமர்

Posted On: 08 JAN 2025 7:40PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பகவான் சிம்ஹாசலம் வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு மரியாதை செலுத்திய திரு மோடி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களின் ஆசீர்வாதத்துடன், நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆந்திராவில் அரசு அமைந்த பிறகு தாம் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நடைபெற்ற வாகனப் பேரணியின் போது தமக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்புக்காக திரு மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவின் ஒவ்வொரு வார்த்தையையும் மதிப்பதாக அவர் கூறினார். திரு நாயுடு தமது உரையில் கூறிய அனைத்தையும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் இந்திய மக்களின் ஆதரவுடன் நிறைவேற்றுவோம் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். 

"நமது ஆந்திரப் பிரதேசம் வாய்ப்புகளின் மாநிலமாக உள்ளது" என்று திரு மோடி கூறினார். இந்த வாய்ப்புகள் உணரப்படும்போது, ஆந்திரப் பிரதேசம் வளர்ச்சியடையும், இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று அவர் குறிப்பிட்டார். ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சி என்பது எங்களது தொலைநோக்குப் பார்வை என்றும், ஆந்திரப் பிரதேச மக்களுக்கு சேவை செய்வதே எங்களது உறுதிப்பாடு என்றும் பிரதமர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் 2.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற ஆந்திரப் பிரதேசம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று திரு மோடி எடுத்துரைத்தார். இந்தத் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க திரு சந்திரபாபு நாயுடுவின் அரசு 'ஸ்வர்ண Andhra@2047' முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு இலக்கையும் அடைய மத்திய அரசு, ஆந்திரப் பிரதேசத்துடன் தோளோடு தோள் நின்று பணியாற்றி வருவதாக கூறிய பிரதமர், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களில் மத்திய அரசு ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறினார். இன்று, 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக ஆந்திரப் பிரதேச மக்களையும், ஒட்டுமொத்த நாட்டையும் பாராட்டினார்.

ஆந்திரப் பிரதேசம் அதன் புதுமையான இயல்பு காரணமாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க மையமாக திகழ்கிறது என்பதை எடுத்துரைத்த பிரதமர், "எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான மையமாக ஆந்திரப் பிரதேசம் மாறுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்றார். பசுமை ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முன்னணியில் இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். 2030-ம் ஆண்டுக்குள் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் இலக்குடன் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் 2023-ல் தொடங்கப்பட்டது என்று திரு மோடி குறிப்பிட்டார். ஆரம்ப கட்டத்தில், இரண்டு பசுமை ஹைட்ரஜன் மையங்கள் நிறுவப்படும் என்றும், அவற்றில் ஒன்று விசாகப்பட்டினத்தில் இருக்கும் என்றும் அவர் கூறினார். உலகளவில் பெரிய அளவிலான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி வசதிகளைக் கொண்ட சில நகரங்களில் விசாகப்பட்டினமும் ஒன்றாக இருக்கும் என்று பிரதமர்  தெரிவித்தார். இந்த பசுமை ஹைட்ரஜன் மையம் ஏராளமான வேலை வாய்ப்புகளையும், ஆந்திராவில் உற்பத்தி சூழல் அமைப்பை உருவாக்கும் என்று அவர் எடுத்துரைத்தார்.

நக்கப்பள்ளியில் மருந்துப் பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாகக் குறிப்பிட்ட திரு மோடி, நாட்டில் இதுபோன்ற பூங்கா அமைக்கப்பட்டுள்ள மூன்று மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசமும் ஒன்று என்று எடுத்துரைத்தார். இந்தப் பூங்கா உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கு சிறந்த உள்கட்டமைப்பை வழங்குவதுடன், முதலீட்டாளர்களின் உற்சாகம் மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் அதே நேரத்தில் உள்ளூர் மருந்து நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நகரமயமாக்கலை ஒரு வாய்ப்பாக அரசு கருதுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஆந்திரப் பிரதேசத்தை புதுயுக நகரமயமாக்கலுக்கு உதாரணமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். இந்தத் தொலைநோக்கை நனவாக்கும் வகையில், கிரிஸ் நகரம் என்றும் அழைக்கப்படும் கிருஷ்ணாபட்டினம் தொழில் பகுதிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்த பொலிவுறு நகரம் சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், ஆயிரக்கணக்கான கோடி முதலீட்டை ஈர்க்கும் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கோடிக் கணக்கான தொழில்துறை வேலைகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீ சிட்டி ஒரு உற்பத்தி மையமாக இருப்பதால் ஆந்திரப் பிரதேசம் ஏற்கனவே பயனடைந்து வருவதாகக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, தொழில், உற்பத்தித் துறைகளில் நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக  ஆந்திரப் பிரதேசம் திகழ வேண்டும் என்பதே  அரசின் இலக்கு என்று கூறினார். உற்பத்தியுடன் இணைந்த  ஊக்கத்தொகை  திட்டம்  போன்ற  முன்முயற்சிகள்  மூலம் அரசு உற்பத்தியை ஊக்குவித்து  வருவதாக  குறிப்பிட்ட  பிரதமர்,  இதன் விளைவாக பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார்.

விசாகப்பட்டினத்தில் தெற்கு கடற்கரை ரயில்வே மண்டல தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை பிரதமர் குறிப்பிட்டார். தனி ரயில்வே மண்டல கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இதன்  முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். தெற்கு கடற்கரை ரயில்வே மண்டல தலைமையகத்தை நிறுவுவதன் மூலம் இந்த பிராந்தியத்தில் விவசாயம், வர்த்தக நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என்றும், சுற்றுலாவுக்கும்,உள்ளூர் பொருளாதாரத்திற்கும்  புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் பிரதமர் கூறினார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான போக்குவரத்து இணைப்புத் திட்டங்களின் தொடக்கம்,  அடிக்கல்  நாட்டு  விழா  ஆகியவை பற்றியும் அவர் குறிப்பிட்டார். 100 சதவீத ரயில்வே மின்மயமாக்கல் கொண்ட மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் உள்ளது என்று  குறிப்பிட்ட  திரு நரேந்திர மோடி, அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் இந்த மாநிலத்தில் 70-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். ஆந்திரப் பிரதேச மக்களின் பயணத்தை எளிதாக்குவதற்காக ஏழு வந்தே பாரத் ரயில்களும், அம்ரித் பாரத் ரயிலும் இயக்கப்படுவதை அவர் எடுத்துரைத்தார்.

"சிறந்த போக்குவரத்து இணைப்புடனும்   சிறந்த வசதிகளுடனும்  கூடிய ஆந்திரப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பு புரட்சி, மாநிலத்தின் சூழலை  மாற்றியமைக்கும்"  என்று  திரு  நரேந்திர மோடி கூறினார். இந்த வளர்ச்சி வாழ்க்கையை எளிதாக்குவதையும், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். இது ஆந்திர மாநிலத்தை  2.5 டிரில்லியன்  டாலர் பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் வர்த்தகத்தின் நுழைவாயில்களாக இருந்து வருவதாகவும், அவை தொடர்ந்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்றும் குறிப்பிட்ட பிரதமர், கடல்சார் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நீலப் பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வருமானம், வணிகத்தை அதிகரிக்க விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதையும், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

வளர்ச்சியின் பயன்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடைவதை உறுதி செய்து, ஒவ்வொரு துறையிலும் உள்ளடக்கிய, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார். வளமான, நவீன ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்குவதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.  ஆந்திரப் பிரதேச மக்களின் வளத்தை உறுதி செய்யும் வகையில் இன்று தொடங்கி வைக்கப்படும் திட்டங்களுக்காக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துப் பிரதமர் திரு  நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச ஆளுநர் திரு எஸ். அப்துல் நசீர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

பசுமை எரிசக்தி மற்றும் நீடித்த எதிர்காலத்திற்கான அவரது உறுதிப்பாட்டின் மற்றொரு முக்கிய படியாக, ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் அருகே புடிமடகாவில் அதிநவீன என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட் பசுமை ஹைட்ரஜன் மைய திட்டத்திற்கு  அடிக்கல் நாட்டினார். இது தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் முதல் பசுமை ஹைட்ரஜன் மையமாக விளங்கும். இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.1,85,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன்களில் மேற்கொள்ளப்படும்முதலீடுகளும் உள்ளடங்கும், இது நாளொன்றுக்கு 1500 டன் பசுமை ஹைட்ரஜன் மற்றும் 7500டன் அது சார்ந்த வாயுக்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளில் ஒன்றாகும். இதில் பசுமை மெத்தனால், பசுமை யூரியா மற்றும் நிலையான விமான எரிபொருள் ஆகியவை அடங்கும். இது முதன்மையாக ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டுள்ளது.  2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் புதைபடிவம் அல்லாத எரிசக்தி திறன் இலக்கான 500 ஜிகாவாட் இலக்கை அடைவதில் இந்த திட்டம் கணிசமான பங்களிப்பை வழங்கும்.

விசாகப்பட்டினத்தில் தெற்குக் கடலோர ரயில்வே தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டுவது உட்பட ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.19,500 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே மற்றும் சாலைத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, போக்குவரத்தை மேம்படுத்தி, பிராந்திய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்.

எளிதில் அணுகக்கூடிய மற்றும் குறைந்த செலவில் சுகாதார சேவை என்ற தனது தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அனகாபள்ளி மாவட்டம் நாக்கபள்ளியில் மருந்துப் பூங்காவுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை வழித்தடம், விசாகப்பட்டினம்-காக்கிநாடா பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்திற்கு அருகாமையில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும் இந்த மருந்து பூங்கா ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் சென்னை- பெங்களூரு தொழில் வழித்தடத்தின் கீழ் கிருஷ்ணபட்டினம் தொழில் பகுதிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய தொழில்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு முதன்மை திட்டமான கிருஷ்ணபட்டினம் தொழில்துறை பகுதி, பசுமை தொழில்துறை நவீன நகரமாக கருதப்படுகிறது. இந்த திட்டம் சுமார் ரூ.10,500 கோடிக்கு குறிப்பிடத்தக்க உற்பத்தி முதலீடுகளை ஈர்க்க அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1 லட்சம் நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகளை  உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வாழ்வாதாரங்களை கணிசமாக மேம்படுத்தி, பிராந்திய முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.

***

PKV/PLM/AG/RS/DL


(Release ID: 2091279) Visitor Counter : 34