ஜவுளித்துறை அமைச்சகம்
மேற்கு வங்க மாநிலம் நாடியாவின் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 04.01.2025 அன்று திறந்து வைக்கிறார்
Posted On:
03 JAN 2025 10:57AM by PIB Chennai
மேற்கு வங்க மாநிலம் நாடியாவின் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 04.01.2025 அன்று திறந்து வைக்கிறார்.
கைத்தறியின் தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்கவும், கைத்தறித் தொழிலுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மத்திய அரசு "இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம்" என்ற பெயரில் 06 தொழில்நுட்ப நிறுவனங்களை கைத்தறி தொழில் அதிகம் உள்ள சேலம், வாரணாசி, குவஹாத்தி, ஜோத்பூர், பர்கர், ஃபுலியா ஆகிய இடங்களில் அமைத்துள்ளது. இந்த ஆறு நிறுவனங்களும் ஜவுளி அமைச்சகத்தின் வளர்ச்சி ஆணையர் (கைத்தறி) அலுவலக நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.
இங்கு பயிலும் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அதிநவீன கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.75.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கட்டிடம் 5.38 ஏக்கர் பரப்பில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் திறன்மிகு வகுப்பறைகள், டிஜிட்டல் நூலகம், கணினி ஆய்வகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் அனைத்து வகையான கைத்தறி மற்றும் துணிநூல் ஆய்வகங்களான துணி பரிசோதனை ஆய்வகம், துணி பதனிடும் ஆய்வகம், மின்னணு ஜக்கார்டு வசதியுடன் கூடிய நெசவு ஆய்வகம், பொது பொறியியல் ஆய்வகம் போன்ற நவீன வசதிகளும் உள்ளன. முழுமையான கற்றல் சூழலுடன் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொடக்க விழாவின் போது, மாண்புமிகு அமைச்சர் மற்ற பிரமுகர்களுடன் இணைந்து "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல்" இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகளை நடுவார்.
இந்தியாவில் உள்ள அனைத்து இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்களில் முதல் 10 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் தகுதி சான்றிதழ்கள் மத்திய ஜவுளி அமைச்சரால் வழங்கப்படும்.
அனைத்து 06 மத்திய இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒருங்கிணைந்த இணையதளமும் "ஜக்கார்டு நெசவுக்கு கணினி உதவியுடன் உருவ வரைபட வடிவமைப்பு" என்ற புத்தகமும் இந்த விழாவின் போது வெளியிடப்படும்.
புதிய வளாகம் முன்மாதிரி கற்றல் இடமாகவும், கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வு மையமாகவும், மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் சிக்கிம் மாநில மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் செயல்படும். இதனால் கிராமப்புற மற்றும் புறநகர் பின்னணியைச் சார்ந்த மாணவர்கள் பயனடைவார்கள். இந்த நிறுவனத்தின் செயல்பாட்டால் ஃபுலியா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
கைத்தறித் தொழில் மிகப்பெரிய மற்றும் முக்கியமான குடிசைத் தொழில்களில் ஒன்றாகும், இது நம் நாட்டின் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார், உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
***
(Release ID: 2089739)
TS/SMB/RR/KR
(Release ID: 2089772)
Visitor Counter : 20