பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 67-வது நிறுவன தினத்தையொட்டி மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளை பாதுகாப்பு அமைச்சர் சந்தித்தார்

Posted On: 02 JAN 2025 3:56PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2025 ஜனவரி 02 ) புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைமையகத்திற்குச் சென்று, 67-வது நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் அங்கிருந்த மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்தும் கலந்து கொண்டார். அப்போது பேசிய திரு ராஜ்நாத் சிங், ஆயுதப்படைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் ஆயத்தப்படுத்துவதன் மூலம் நாட்டின் உள்நாட்டு திறன்களை மேம்படுத்தியதற்காகவும், தனியார் துறையுடனான ஒத்துழைப்பின் மூலம் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தியதற்காகவும் பாராட்டினார்.

2025 ஆம் ஆண்டு 'சீர்திருத்தங்களின் ஆண்டாக'  அறிவிக்கப்பட்டுள்ளதால், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்  முக்கியப்  பங்கு வகிக்கும் என்று அமைச்சர் கூறினார். விரைவாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும், மாறிவரும் காலத்திற்கு ஏற்ற உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடுகள் பின்பற்றும் தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளை விஞ்ஞானிகள் கவனித்து தமக்கேற்றாற்போல உருவாக்க வேண்டும் என்றும், இந்த அமைப்பை உலகின் வலுவான ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்புகளில் ஒன்றாக மாற்றும் நோக்கத்துடன் முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வின் போது நீண்ட தூர ஹைப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வடிவமைத்த குழுவினரையும் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். பாதுகாப்பு ஆராய்ச்சி  மேம்பாட்டு நிறுவனம் ஆண்டு தோறும் ஜனவரி 1 ஆம் தேதியை தனது நிறுவன நாளாகக் கொண்டாடுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089584

----

TS/IR/KPG/KR

 


(Release ID: 2089594) Visitor Counter : 49